"மிகச் சிறந்த நடன திறமை கொண்டவர் எம்ஜிஆர்"-ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

MGR and Jayalalitha
சென்னை: மீண்டும் அதிமுக ஆட்சி அமைய தொண்டர்கள் அனைவரும் ஆர்வத்துடனும், ஒற்றுமையாகவும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று கட்சித் தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று எம்.ஜி.ஆரின் 94வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

என்னுடைய அரசியல் ஆசான், நம் அன்புக்குரிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 94வது பிறந்த நாளில், அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் எனது மகிழ்ச்சி கலந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பூரிப்படைகிறேன்.

தமிழர்கள், அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அனைவருக்கும் நம்முடைய அன்புத் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் என்பது எண்ணற்ற சிந்தனைகளையும், பல உணர்ச்சிப் பூர்வமான அனுபவங்களையும் நெஞ்சில் மலரச் செய்யும் நாள். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்" என்ற கேள்வியை மக்கள் முன் எழுப்பினால், "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்." என்று தான் பதில் வரும்.

எம்.ஜி.ஆரின் தனித் தன்மையைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். அவர் ஒரு மிகச் சிறந்த மனிதர். மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து நேசிக்கின்ற பேருள்ளம் அவருக்கு இருந்தது. கலைத் துறையில் அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர். மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர். திரைப்படத் துறையில் அவருக்குத் தெரியாத தொழில்நுட்பமே கிடையாது.

மிகச் சிறந்த இசை உணர்வு கொண்டவர். மிகச் சிறந்த நடன திறமை கொண்டவர். நகைச்சுவை உணர்வோடு நடிப்பதென்றால் அதிலும் அவருக்கு நிகர் கிடையாது. அவருக்குத் தெரியாதது ஒன்றே ஒன்று தான். அது, அடுத்தவர்களைக் கெடுப்பது.

ஒரு தீய சக்தியிடமிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே அவதாரம் எடுத்தவர் எனது அரசியல் ஆசான் எம்.ஜி.ஆர். தன்னிகரற்ற மனிதராக, பல்துறை வல்லுநராக, எதைச் செய்தாலும் அதில் வெற்றி வாகை சூடும் சாதனையாளராக, இவரைப்போல இன்னொருவர் பிறக்க முடியாது என்று எதிரிகளும் சொல்லும் சரித்திர நாயகராக வாழ்வாங்கு வாழ்ந்தவர் அவர்.

வரலாற்றை கி.மு., கி.பி. என்று பிரிப்பதைப் போல, சுதந்திர இந்தியாவின் அரசியலையும், ஆட்சி முறையையும் எம்.ஜி.ஆருக்கு முன், எம்.ஜி.ஆருக்குப் பின் என்று இரண்டாகப் பிரிக்கலாம். எப்படி என்கிறீர்களா?.

எம்.ஜி.ஆருடைய ஆட்சிக்குப் பின்னர் தான், அரசாங்கங்கள் ஒரு சாதாரண தனி மனிதனை முன் வைத்து திட்டங்களைத் தீட்ட ஆரம்பித்தன. அந்தத் திட்டங்கள், ஒரு ஜனநாயகம் என்றால் அது இப்படித் தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு இலக்கணம் வகுக்கின்ற திட்டங்களாகவும், ஒரு சாதாரண தனி மனிதனுடைய தேவைகளை பூர்த்தி செய்வது தான் அரசாங்கத்தினுடைய முதல் கடமை என்று உணர்த்துகின்ற திட்டங்களாகவும் அமைந்தன.

இன்றைக்கும் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், இலவச வேட்டி சேலை திட்டம், வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம் போன்ற திட்டங்கள் எல்லாம் ஒரு சாதாரண மனிதனை மையமாகக் கொண்ட திட்டங்கள். இனி, எத்தனை நூறு ஆண்டுகள் ஆனாலும் இத்தகைய திட்டங்களைத் தான் அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்;

இது போன்ற திட்டங்களைத் தான் புதிதாக அறிமுகம் செய்ய வேண்டும் என்ற அளவிற்கு வரலாற்றையே எம்.ஜி.ஆருக்கு முன், எம்.ஜி.ஆருக்குப் பின் என்று பிரிக்கும் அளவிற்கு ஆட்சி செய்த புகழுக்கு உரியவர் எம்.ஜி.ஆர். அவர் கூறிச் சென்ற அரசியல் பாடமும், அவர் வாழ்ந்து காட்டிய அரசியல் முறையும் தான் எனக்கும் முன்மாதிரி.

எம்.ஜி.ஆர். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் தமிழ்ச் சமூகத்திற்கு என்னவெல்லாம் தொண்டு ஆற்றி இருப்பாரோ, அவற்றையெல்லாம் செய்து முடிப்பதற்காகத் தான் இந்த மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆர். என்னுடைய கரங்களில் விட்டுச் சென்றார்.

தீய சக்தியின் ஆட்சி நடைபெறும் போதெல்லாம் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைகிறது. மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அரசின் கருவூலம் காலி செய்யப்படுகிறது. ஒவ்வொரு முறையும் பெரும் சோதனைகளுக்கு இடையே ஆட்சி நம் கைக்கு வருகிறது.

இலவச சைக்கிள், இலவச பாடநூல், புதிய வீராணம் திட்டம், ஆலயங்களில் அன்னதானம், தொட்டில் குழந்தைகள் திட்டம், உழவர் பாதுகாப்புத் திட்டம், விரிவான தரிசு நில மேம்பாட்டுத் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மழைநீர் சேகரிப்புத் திட்டம், உறுதியான சட்டம்- ஒழுங்கு, கட்டுக்கோப்பான சமூகப் பாதுகாப்பு என்று நல்லாட்சி வழங்குகிற வாய்ப்பினை தமிழக மக்கள் எனக்கு அளித்தார்கள்.

ஆனால், கடந்த நான்கே முக்கால் ஆண்டுகளாக, மணல் கொள்ளை, ரேஷன் பொருள்கள் கடத்தல், கிரானைட் கொள்ளை, கள்ள லாட்டரி விற்பனை, நில அபகரிப்பு, கள்ளச் சாராயம் என பல்வேறு ஊழல்களிலும், மக்களைச் சுரண்டும் செயல்களிலும் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் புரிந்து பொதுச்சொத்தை தங்களது சொத்தாக மாற்றிக் கொண்டார்கள். தீய சக்தியை ஆட்சியிலிருந்து விரட்டவும், எம்.ஜி.ஆரின் இயக்கத்தை ஆட்சிப் பீடத்தில் அமர்த்தவும் தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும், எம்.ஜி.ஆரின் இயக்கத்தை ஆட்சிப் பீடத்தில் அமர்த்த தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. எம்.ஜி.ஆரின் நல்லாட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் மலரச் செய்யும் மாபெரும் மக்கள் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட இந்த நன்னாளில் உளமார உறுதியேற்போம்.

ஆர்வத்தோடு தொண்டாற்றுங்கள்!. அனைவரும் ஒற்றுமையாய் செயல்படுங்கள்!. எம்.ஜி.ஆர். ஆட்சியை மலரச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நினைவில் கொண்டு பணியாற்றுங்கள்!என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+