தென் அட்லாண்டிக் கடலில் தமிழக மாலுமி மாயம்-கடலில் விழுந்து பலி?

மணி பாலாஜி என்ற அந்த 22 வயதான மெரைன் என்ஜினியர் ஹாங்காங்கைச் சேர்ந்த வேலம் ஷிப் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.வி.இவாகி என்ற கப்பலில் பணியாற்றி வந்தார். இந்தக் கப்பல் கடந்த டிசம்பர் 26ம் தேதி பிரேசிலின் போர்ட் சாண்டோசில் இருந்து கிளம்பியபோது அவர் கப்பலில் இருந்தார். அன்றைய தினம் நள்ளிரவு 1.30 மணி வரை அவரை கப்பலில் இருந்த பிற ஊழியர்கள் பார்த்துள்ளனர்.
ஆனால், கப்பல் போர்ட் விக்டோரியா என்ற இடத்தை அடைந்தபோது அவரைக் காணவில்லை. அவர் கடலில் விழுந்து இறந்து போயிருக்கலாம் என்று கப்பல் நிறுவனம் கூறியுள்ளது.
ஆனால், இதில் மர்மம் நிலவுவதாக பாலாஜியின் தாயார் கெளரி பாய் தெரிவித்துள்ளார்.
கப்பலில் இருந்த இன்னொரு என்ஜினரான ராஜவேல் என்பவர் மூலம் கிடைத்த தகவலின்படி, பாலாஜி 26ம் தேதி நள்ளிரவு கப்பலில் ஒரு பார்ட்டிக்காக சென்றது தெரியவந்துள்ளது.
27ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு பாலாஜியைக் காணவில்லை என்று தெரியவந்தவுடன் 6 படகுகளில் கடலில் தேடுதல் வேட்டை நடந்ததாகவும், பிரேசில் கடற்படை ஹெலிகாப்டர்களும் தேடுதல் வேட்டை நடத்தியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications