Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெட்ரோல் விலையை உயர்த்திக் கொண்டே போனால் குதிரை வண்டியில்தான் போக வேண்டும்-ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால், இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் பொதுமக்களும், ஆட்டோவில் செல்லும் சாதாரண மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த நிலை நீடித்தால், குதிரை வண்டி, மாட்டு வண்டி, சைக்கிள் போன்ற வாகனங்களில் தான் மக்கள் செல்ல நேரிடும். இதற்கும் வழியில்லை என்றால் நடந்து செல்ல வேண்டியது தான் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் தலைமையில் உயர்நிலைக் குழுக் கூட்டத்தினை நடத்திவிட்டு, உடனடியாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 2.55 உயர்த்திக் கொள்ள திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வை தட்டிக் கேட்க வேண்டிய முதல்வர் கருணாநிதி மௌனம் சாதிக்கிறார். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஜனவரி 14-ம் தேதி முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அன்று இரவுதான் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.55 உயர்த்தப்பட்டது. ஒருவேளை கருணாநிதி எடுத்த குறுகிய கால நடவடிக்கையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருக்குமோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விலைவாசி உயர்வுக்கு பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வும் முக்கியமான காரணம். ஆனால், விலைவாசியை கட்டுப்படுத்துகிறேன் என்று சொல்லி, பெட்ரோலின் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வதும், அதனை மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வருவதும் கண்டனத்துக்குரியது.

கடந்த டிசம்பர் 14-ம் தேதி தான் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. ஒரு மாதத்துக்குள் பெட்ரோலின் விலை மீண்டும் ரூ.2.55 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.15 அளவுக்கு ஒன்பது முறை உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் பொதுமக்களும், ஆட்டோவில் செல்லும் சாதாரண மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். பெட்ரோலை எரிபொருளாகப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளும் கூடுதல் நிதியை சுமக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும். இதனால் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலைகள் உயரக்கூடும்.

இந்த நிலை நீடித்தால், குதிரை வண்டி, மாட்டு வண்டி, சைக்கிள் போன்ற வாகனங்களில் தான் மக்கள் செல்ல நேரிடும். இதற்கும் வழியில்லை என்றால் நடந்து செல்ல வேண்டியது தான். நாட்டு மக்களை நவீன காலத்திலிருந்து கற்காலத்திற்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசும், தி.மு.க. அரசும் எடுத்துக் கொண்டு இருக்கின்றன.

பெட்ரோல் விலை உயர்வினால் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் மேலும் உயரும். பணவீக்கமும் அதிகரிக்கும். ரூ.70 லட்சம் கோடி அளவுக்கு இந்தியர்களின் பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் மிக முக்கியப் பிரமுகர்களால் வெளிநாட்டு வங்கிகளில் ரூ. 21 லட்சம் கோடி அளவுக்கு பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஒரு தன்னார்வ நிறுவனம் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளது.

இந்திய அரசு கேட்டால் ஜெர்மனியில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் 250 இந்தியப் பிரமுகர்களின் பெயர்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக அந்நாட்டின் நிதி அமைச்சர் அறிவித்து இருப்பதாக செய்திகள் வந்தன. பல்வேறு நாடுகள் ஜெர்மனியிடமிருந்து தகவல்களை பெற்றுள்ளன என்றும், இந்தியாவும் தகவல்களைப் பெற்று ரகசியமாக வைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதில் என்ன ரகசியம் இருக்கிறது? உண்மையிலேயே மத்திய அரசுக்கு மக்கள் மீது அக்கறை இருக்குமானால், வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணத்தை மீட்டிருக்க வேண்டும். இதைச் செய்திருந்தால், நம் நாடு செழிப்படைவதோடு, பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய அவசியமும் இருக்காது.

மாறாக மத்திய அரசு பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்தி அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் உயர வழி வகுத்து இருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கையை பார்க்கும் போது, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பட்டியலில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் பெயர்கள், குறிப்பாக 2ஜி அலைக்கற்றை ஊழலில் தொடர்புடையவர்கள் பெயர்கள் இடம் பெற்றிருக்குமோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இது மட்டுமல்லாமல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளும் உயர்த்தப்பட வேண்டும் என்ற எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டு விடுமோ என்கிற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வினால் வெங்காயம், காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களின் விலைகள் மேலும் உயர இருக்கிறது. எனவே, மக்களின் நலன் கருதி பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+