தமிழக மக்களை இந்திய அரசும், கடற்படையும் கைவிட்டு விட்டது-வைகோ குமுறல்
சென்னை: இந்தியக் கடற்படையும் அரசும் தமிழக மீனவர்களைக் காக்கும் கடமையைச் செய்யாமல், அவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்படட்டும் என்று கைகழுவி விட்டதாகவே தமிழக மக்கள் கருதுகிற நிலைமைக்கு ஆளாகி விட்டார்கள். பிரதமர் உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவித்து, இத்தகைய தாக்குதல் இனி நடக்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்யாவிட்டால் தமிழக மீனவர்கள் படுகொலைக்கு இந்திய அரசே பொறுப்பு ஏற்க வேண்டி வரும் என்று எச்சரித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
மீனவர் ஜெயக்குமார் படுகொலை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பேக்ஸ் ஒன்றை அனுப்பியுள்ளார் வைகோ. அதில் அவர் கூறியிருப்பதாவது:
நேற்று நான் உங்களைச் சந்தித்தபோது, இலங்கையில் ஈழத் தமிழர் படுகொலை குறித்தும், தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டு படுகொலைக்கு உள்ளாவது குறித்தும் அதை இந்தியக் கடற்படை வேடிக்கை பார்ப்பது குறித்தும் எடுத்துக் கூறினேன்; கடிதமாகவும் தந்தேன். இலங்கை அரசுடன் பேசி இதைத் தடுக்க தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தீர்கள்.
ஆனால், நேற்றே வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் இலங்கைக் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். மீனவர் ஜெயக்குமாரும் மற்றும் செந்தில், ராஜேந்திரன் என்ற இரு மீனவர்களும் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது இலங்கைக் கடற்படையினர் வந்து படகைத் தாக்கி மிரட்டி உள்ளனர். பயந்து போன ராஜேந்திரனும், செந்திலும் கடலில் குதித்து விட்டனர்.
மீனவர் ஜெயக்குமார் ஊனமுற்றவர் என்பதாலும், கடல் அலைகளில் நீந்த முடியாது என்பதாலும் படகில் இருந்து கடலில் குதிக்க முடியாமல் தன்னைக் காப்பாற்றுமாறு மன்றாடி உள்ளார். ஆனால், இலங்கைக் கடற்படையினர் ஈவு இரக்கம் இன்றி ஜெயக்குமாரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி படகைச் சுற்றிச் சுற்றி இழுத்ததில் ஜெயக்குமார் உயிர் இழந்தார்.
படகில் உடலைப் போட்டுவிட்டு இலங்கைக் கடற்படையினர் சென்று விட்டனர். அருகில் நீந்திக் கொண்டு இருந்த செந்திலும் ராஜேந்திரனும் பின்னர் படகைக் கொண்டு வந்து ஜெயக்குமாரின் உயிரற்ற உடலைக் கரையில் சேர்த்து உள்ளனர். ஜெயக்குமாருக்கு ஓராண்டுக்கு முன்னர்தான் திருமணமாகி உள்ளது.
புதுக்கோட்டை மீனவர் வீரபாண்டியன் இலங்கைக் கடற்படையினரால் ஒரு வாரத்துக்கு முன் கொல்லப்பட்டு அந்தக் கண்ணீர் உலர்வதற்கு முன்பே மேலும் ஒரு தமிழக மீனவர் இலங்கைக் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டது மன்னிக்கவே முடியாத கொடுஞ்செயல்.
இந்தியக் கடற்படையும் அரசும் தமிழக மீனவர்களைக் காக்கும் கடமையைச் செய்யாமல், அவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்படட்டும் என்று கைகழுவி விட்டதாகவே தமிழக மக்கள் கருதுகிற நிலைமைக்கு ஆளாகி விட்டார்கள்.
நீங்கள் உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவித்து, இத்தகைய தாக்குதல் இனி நடக்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்யாவிட்டால் தமிழக மீனவர்கள் படுகொலைக்கு இந்திய அரசே பொறுப்பு ஏற்க வேண்டி வரும் என்று குமுறலுடன் தெரிவித்துள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications