ராசாவை பின்னாலிருந்து இயக்கியவர்களையும் கைது செய்ய வேண்டும்-கத்காரி
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசாவை மட்டும் கைது செய்தால் போதாது. அவரை பின்னாலிருந்து இயக்கியவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளது. இதில் ராசாவுக்கு மட்டுமல்லாமல் ஆட்சி, அதிகாரத்தில் மேல்மட்டத்தில் உள்ள வேறு பலருக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள் ராசாவை பின்னால் இருந்து இயக்கியுள்ளனர். அவர்கள் எல்லாம் யார் என்பதைக் கண்டறிந்து அனைவரையும் கைது செய்து மக்கள் முன் நிறுத்த வேண்டும்.
தங்களிடம் உள்ள சொத்துக்கணக்கை வெளியிட வேண்டுமென்று எங்கள் கூட்டணித் தலைவர்கள், முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்று காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்கள் சொத்துக் கணக்கை வெளியிடுமாறு உத்தரவிடமுடியமா? முதலில் சோனியா காந்திதான் தனது உண்மையான சொத்துக் கணக்கை வெளியிடத் தயாரா?
ஆளும்கூட்டணியில் உள்ள பலரும் வெளிநாட்டில் கறுப்புப் பணத்தை வைத்துள்ளனர் என்பது கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள் பட்டியலை வெளியிடும் விஷயத்தில் அவர்கள் காட்டும் தயக்கத்தில் இருந்தே தெரியவருகிறது என்றார் அவர்.
பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறுகையில்,
ஆ.ராசா கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் காலம் கடந்து எடுக்கப்பட்டுள்ள ஒரு சிறிய அளவிலான நடவடிக்கை. சில ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற நடவடிக்கையை எடுத்திருந்தால் பிரதமரைப் பாராட்டியிருக்கலாம். இந்த நடவடிக்கை மூலம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணை தேவை என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது என்றார்.
சொத்துக்களைப் பறிமுதல் செய்க-பொன்.ராதாகிருஷ்ணன்
இதற்கிடையே ராசாவின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த கைது நடவடிக்கை, காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் இப்போதாவது கைது செய்துள்ளது வரவேற்க வேண்டியது.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் 2ஜி அலைக்கற்றை ஊழலால் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மக்களின் கோபத்தை தணிக்க ஒரு கண்துடைப்பாக கைது நடவடிக்கைகள் இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் ஏற்கெனவே கூறி வந்தார்கள். இப்போது எடுக்கப்பட்டுள்ள கைது நடவடிக்கை போலித்தனமான ஒன்றாக இல்லாமல் உறுதியான நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
திமுக தலைவர் கருணாநிதி கூறியது போல, ரூ. 1.76 லட்சம் கோடி ஊழலை தனி ஒரு மனிதர் செய்திருக்க முடியாது. எனவே, இந்த ஊழலில் தொடர்புடைய மற்ற அரசியல்வாதிகள், அதிகாரிகளையும் கைது செய்து அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
நாடாளுமன்ற கூட்டுக் குழு, உச்ச நீதிமன்றத்தின் விசாரணைகள் மூலம் மட்டுமே இந்த ஊழலின் முழு விவரங்களை வெளிக் கொண்டு வரமுடியும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications