11ம் தேதி முதல் தூத்துக்குடி-கொழும்புக்கு மீண்டும் படகு போக்குவரத்து

தூத்துக்குடியில் இருந்து மிளகாய் வத்தல், வெங்காயம், உருளைகிழங்கு, உலர் மீன், பீடி, சிமென்ட், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் ஜல்லி, மணல் உள்ளிட்ட பொருட்கள் படகு மூலம் கொழும்பு மற்றும் மாலத்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து பழைய இரும்பு பொரு்ட்கள் உள்ளிட்டவை தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டன.
தினமும் ஏராளமான படகுகள் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து சரக்கு ஏற்றி சென்று வந்தன. தூத்துக்குடி பழைய துறைமுகத்தை தங்கும் தளமாக கொண்டு 200 டன் முதல் 450 டன் கொள்ளவு கொண்ட இயந்திரமயமாக்கப்பட்ட 40 படகுகள் உள்ளன. இவைகளை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த படகு போக்குவரத்து பல்வேறு காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளாக பின்னடைவை கண்டது. இலங்கையில் நிலவிய அமைதியற்ற சூழ்நிலை, சரக்கு கப்பல் போக்குவரத்தால் ஏற்பட்ட கடும் போட்டி, இலங்கை அரசு அவ்வப்போது அறிவித்த நெருக்கடி நடைமுறைகள், இந்திய அரசின் ஆதரவின்மை, இந்திய கடல் வாணிப கழகத்தால் விதிக்கப்பட்ட கடுமையான விதிமுறைகள், படகுகளை பழுது பார்க்க வசதி இல்லாதது போன்ற காரணங்களால் தூத்துக்குடி-கொழும்பு படகு போக்குவரத்தில் பின்னடைவு ஏற்பட்டது.
இதுபோன்ற நெருக்கடியினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு படகு போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. மாலத்தீவுக்கு மட்டும் இரண்டு மாதங்களுக்கு அல்லது 3 மாதங்களுக்கு 1 படகு என்ற வகையில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் தூத்துக்குடி-கொழும்பு இடையே மீண்டும் படகு போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமேன கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வரும் 11-ம் தேதி முதல் தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு படகு போக்குவரத்து தொடங்குகிறது.
முதலில் ஒரு படகு உப்பு ஏற்றிக் கொண்டு கொழும்பு செல்கிறது. இதைத் தொடர்ந்து ஏராளமான சரக்குகளை கொண்டு செல்ல படகுகள் தயாராகி வருகின்றன.












Click it and Unblock the Notifications