'நான் திமுகவில் சேர்ந்துவிட்டேன்'..பாஜக அலுவலகத்தில் நடந்த கூத்து!!

அப்போது, அவரிடம் நிருபர்கள், பாஜக தமிழக முன்னாள் மாநில தலைவர் டாக்டர் கிருபாநிதி திமுகவில் இணைந்துவிட்டாரே என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், ''டாக்டர் கிருபாநிதி பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளில் பற்றுள்ளவர். அவர் எந்த கட்சியிலும் சேரவில்லை. பாரதிய ஜனதா கட்சியில் தான் இருக்கிறார். சிறிது நேரத்தில் அவர் இங்கு வருவார்'' என்றார்.
அவர் சொன்னதைப் போலவே டாக்டர் கிருபாநிதி சிறிது நேரத்தில் அங்கு வந்தார்.
உடனே மிகவும் மகிழ்ச்சியாக.. பார்த்தீர்களா கிருபாநிதியே வந்துவிட்டார். அவரிடமே கேளுங்கள் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.
இதையடுத்து நிருபர்கள் கிருபாநிதி பக்கம் திரும்ப, ''ஆமாம், நான் திமுகவில் இணைந்துவிட்டது உண்மை தான். இப்போதும் நான் திமுகவில் தான் உள்ளேன். சில விளக்கங்களை கூறுவதற்காகவே இங்கு வந்தேன்'' என்று கூற பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அங்கிருந்த சில பாஜகவினரின் முகம் இருண்டது.
இதையடுத்து தனது பேட்டியை பாதியிலேயே முடித்துக் கொண்டு எரிச்சலுடன் கிளம்பினார் பொன்.ராதாகிருஷ்ணன்.
முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் டெல்லியில் இலங்கை தூதரை சந்தித்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு 977 கெளரவ விரிவுரையாளர்களை 2003-04ம் ஆண்டில் நியமித்தது. 2006 தேர்தலின்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அவர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அவர்கள் இன்னும் நிரந்தரம் செய்யப்படவில்லை. மாறாக புதிதாக 988 விரிவுரையாளர்களை நியமிக்கப் போவதாகவும் அறிவித்திருப்பது அவர்களுக்கு செய்யும் துரோகமாகும்.
100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 100 சதவீத ஓய்வூதிய உயர்வு என்று அரசு அறிவித்திருப்பது அரசு ஊழியர்களை அவமானப்படுத்தும் செயல். எனவே 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இரட்டிப்பு ஓய்வூதியம் என்று வழங்க வேண்டும்.
தமிழக வீட்டுவசதி வாரியத்தின் வீடு, மனை, கடைகள் ஒதுக்கீட்டில் விருப்புரிமை ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதுபோல் ஒதுக்கப்பட்டவைகளையும் ரத்து செய்து அறிவிக்க வேண்டும். இதில் கோயம்பேடு கடைகள் ஒதுக்கீடு உள்பட பல இடங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக தலைவர் அருண்ஷோரிக்கு சம்மன் அனுப்பி அழைத்திருப்பது வழக்கமான செயல் தான். அவரும் தனது நிலையை சொல்வதற்கு செல்வதாக கூறியிருக்கிறார்.
தேர்தல் கூட்டணி தொடர்பாக எங்களுடனும் யாரும் தொடர்பு கொள்ளவில்லை, நாங்களும் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. எங்கள் சொந்த காலில் நின்று வெற்றி பெற முயற்சி எடுத்து வருகிறோம். அந்த நம்பிக்கையும் இருக்கிறது. அதே சமயம் தி.மு.க. தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்ற எங்கள் கருத்தை வலியுறுத்துகிறோம்.
பிப்ரவரி 26ம் தேதி மகளிரணி சார்பில் நாகர்கோவிலில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது. இதில் அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி, மகளிரணி தேசிய தலைவர் ஸ்மிரிதி இரானி ஆகியோர் பங்கேற்கிறார்கள் என்றார்.
இதன் பின்னர் கிருபாநிதி விவகாரம் நடக்க.. பிரஸ்மீட் பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது.
இல.கணேசன் பிறந்த நாள்-கருணாநிதி நேரில் வாழ்த்து:
இந் நிலையில் பாஜக தமிழக முன்னாள் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசனின் 66வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள இல.கணேசன் வீட்டிற்கு முதல்வர் கருணாநிதி நேரில் சென்று சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாங்கள் இருவேறு துருவங்களாக இருந்தாலும், நட்பு பாராட்ட முடியும் என்ற அடிப்படையில் முதல்வர் கருணாநிதி என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது பெருமையாக இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications