2000க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் துரத்தியடித்த இலங்கை கடற்படை
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டியடித்தனர். இதனால் மீனவர்கள் தப்பி ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.
தமிழக மீனவர்கள் கடலுக்கே வரக் கூடாது என்ற நோக்கத்தில் கொடூரமாக செயல்பட்டு வருகிறார்கள் இலங்கைக் கடற்படையினர். இவர்களுடன் இப்போது யாழ்ப்பாணம் தமிழ் மீனவர்களும் இணைந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழக மீனவர்களைத் தாக்குவது, விரட்டியடிப்பது, சுட்டுக் கொல்வது என்று இலங்கைக் கடற்படையினரின் அட்டகாசம் தொடர்ந்து வரும் நிலையில் தமிழக மீனவர்கள் வாழ வழியில்லாத நிலையை நோக்கி மெல்ல மெல்ல தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
நேற்று முன்தினம், ராமேஸ்வரத்திலிருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், 2,400 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள், தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடையே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது, 4 சிறிய வகை ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படை வீரர்கள் அங்கு வந்தனர். தமிழக மீனவர்களை சுற்றி வளைத்த அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டியடி, இங்கிருந்து ஓடி விடுங்கள் என்று எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை விட்டு விட்டு அங்கிருந்து கிளம்பி கரைக்கு விரைந்து வந்தனர்.
இதுகுறித்து மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா கூறுகையில், சிங்கள கடற்படையினர், சர்வதேச கடல் எல்லையை தாண்டி வந்து, தமிழக மீனவர்களை விரட்டி அடித்து அட்டூழியம் செய்தனர். சர்வதேச கடல் எல்லை பகுதியில் தமிழக கடலோர காவல் படையினர் நமது மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.
எத்தனை முறை சொன்னாலும் அதை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து வருவதால் தமிழக மீனவர்கள் கடும் குமுறலுடன் உள்ளனர்.












Click it and Unblock the Notifications