பிரேமானந்தா மரணம்: நீதி விசாரணை தேவை-இந்து மக்கள் கட்சி

Subscribe to Oneindia Tamil

Premanandha
சென்னை: சாமியார் பிரேமானந்தாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரியுள்ளது.

அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமானந்தா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆயுள் தண்டனை கைதியாகவே காலமாகிவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

கோவையில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்குக் கூட தமிழக அரசு பொதுமன்னிப்பு வழங்கியது. ஆனால் பிரேமானந்தாவை மருத்துவ சிகிச்சைக்காகக் கூட விடுதலை செய்யவில்லை.

பிரமோனந்தாவுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, பிரேமானந்தாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.

அதேபோல, அவரோடு சிறையில் அடைக்கப்பட்ட கமலானந்தா உள்பட அனைவருக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

234 தொகுதிகளிலும் போட்டி-பாஜக:

இந் நிலையில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வேலூரில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழ்நாட்டில் பாஜக தனிப்பெரும் சக்தியாக வளர்ந்துள்ளது. 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். இதுவரை கூட்டணி குறித்து எந்தக் கட்சியும் எங்களுடன் பேசவில்லை.

இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட வீரபாண்டியன் குடும்பத்துக்கு தமிழக பாஜக சார்பில் ரூ. 2 லட்சம் வழங்கியுள்ளோம். அவரது சகோதரி ரேவதியின் படிப்புச் செலவை பாஜக ஏற்கும்.

இலங்கை அரசால் கொடுமையான தாக்குதலுக்கு ஆளாகி, குடும்பம், சொத்துகளை இழந்து தவிக்கும் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வுக்கு பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மார்ச் 6ம் தேதி முதல் 15ம் தேதிவரை நிதிவசூல் செய்யப்படும் என்றார்.

கடல் முற்றுகைப் போராட்டம்:

பின்னர் சேலத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் திமுக தோற்கடிக்கப்பட வேண்டும். இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். துரதிர்ஷ்டவசமாக இம்முயற்சி பெரிய அளவில் நடைபெறவில்லை.

எனவே, நாங்கள் எங்கள் சொந்த பலத்தில் பேரவைக்குள் நுழைய முயற்சிக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளோம். எங்களுக்கு இரட்டை இலக்கத்தில் வெற்றி வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 3 வது அணி அமையும் வாய்ப்பில்லை. கூட்டணி குறித்து அதிமுக தரப்பில் இருந்து எங்களை அழைக்கவும் இல்லை. நாங்கள் பேசவும் இல்லை.

இனியும் மீனவர் மீதான தாக்குதல் தொடர்ந்தால் மத்திய அரசில் இருந்து தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள் ராஜிநாமா செய்ய வேண்டும். மீண்டும் தாக்குதல் நடைபெற்றால் பாஜக கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.

மேலவைத் தேர்தல் நிறுத்தம்-பாஜகவுக்கு வெற்றி:

இந் நிலையில் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அவசரக் கோலத்தில் நடக்கவிருந்த மேலவைத் தேர்தல் நிறுத்தப்பட்டது தமிழக பாஜகவுக்கு கிடைத்த வெற்றி. சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னரே மேலவைக்கு தேர்தல் நடத்தவேண்டும்.

தமிழகத்தில் இருந்த சட்ட மேலவையை 1986ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி எம்.ஜி.ஆர். கலைத்தார். 1989, 1996ல் ஆட்சிக்கு வந்த திமுக சட்ட மேலவை அமைக்க முயற்சி செய்து தோற்றுப்போனது.

2010 ஏப்ரல் 11ம் தேதி மேலவை அமைப்பதற்கான தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அவசர அவசரமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. வரும் தேர்தலில் திமுகவின் தோல்வி உறுதி என்பதால் அவசர அவசரமாக மேலவைத் தேர்தலை நடத்தி முடிக்க முடிவு செய்தார்கள்.

பல லட்சம் பட்டதாரிகளைக் கொண்ட தமிழகத்தில் சில ஆயிரம் பட்டதாரிகளை மட்டும் வாக்காளர்களாகச் சேர்த்துள்ளனர். விரைவில் காலாவதியாகவுள்ள எம்.எல்.ஏக்களைக் கொண்டும் புதிய மேலவை உருவாக்க திட்டம் தீட்டப்பட்டது. மேலவைத் தேர்தலுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற விதிமுறையும் பின்பற்றப்படவில்லை. இந்த ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து தேர்தல் ஆணையம் வரை சென்று பாஜக போராடியது.

பாஜக தொடர்ந்த வழக்கில் தமிழக சட்ட மேலவைத் தேர்தலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

மேலவைத் தேர்தலுக்கான முறையான அறிவிப்பு வரும்போது தமிழகத்தின் அனைத்து பட்டதாரிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், ஆசிரியர்களும் தகுதியும், திறமையும் வாய்ந்த மேலவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+