திண்டுக்கல் நீதிமன்றத்தில் வெடிகுண்டு புரளி : நீதிமன்றப் பணிகள் பாதிப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்ததையடுத்து மதியம் வரை நீதிமன்ற பணிகள் ஒத்தி வைக்கப்பட்டன.
திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்திற்கு காலை நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் தன்னை தமிழ்நாடு முன்னேற்ற கழக நிர்வாகி என அறிமுகப்படுத்திக் கொண்டு, இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிளார்க் லீலா மாவட்ட நீதிபதி பஷீர் அகமதுவிடம் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து மாவட்ட நீதிபதியின் நேர்முக உதவியாளர் வீராச்சாமி, திண்டுக்கல் எஸ்.பி. சரவணனிடம் இது குறித்து புகார் தெரிவித்தார்.
இதனால் அனைத்து நீதிமன்றங்களில் இருந்த நீதிபதிகள், மாஜிஸ்திரேட்கள், வக்கீல்கள், வழக்கு சம்பந்தமாக வந்த பொது மக்கள் என அனைவரும் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.
பின்பு நீதிமன்றத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறப்பட்ட தகவல் புரளி என தெரிய வந்தது. இதனால் நீதிமன்ற பணிகள் மதியம் சுமார் ஒரு மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications