ஜெயலலிதாவின் ஆதரவு நாடகத்தை அரசு ஊழியர்கள் நம்பமாட்டார்கள் : கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அரசு அலுவலர்கள், சத்துணவு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீலிக்கண்ணீர் ததும்ப அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அரசு ஊழியர்கள் பட்டபாட்டை அவர் இவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடலாமா? போக்குவரத்து ஊழியர்களைப் பற்றிக் கூட ஜெயலலிதா அறிக்கையிலே கூறியிருக்கிறாரே, அதே போக்குவரத்து ஊழியர்கள் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் அதிமுக சார்புடைய சங்கத்திற்கு எத்தனை தொழிலாளர்கள் வாக்களித்தார்கள் என்பது மறந்துவிட்டதா? முதல் இடத்திலே திமுக சார்புடைய சங்கமும், அதற்கு அடுத்து சிஐடியு சங்கமும், அதற்கடுத்து மூன்றாவதாகத்தான் அதிமுக சங்கமும் வாக்குகளை போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியிலே பெற்றன என்ற புள்ளி விவரங்களை ஜெயலலிதா அறியமாட்டாரா?
அரசு அலுவலர்களுக்காக தற்போது அறிக்கையிலே பாசாங்கு செய்து பரிந்து பேசும் ஜெயலலிதா ஆட்சியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை அழைத்து பேசப்போகிறேன் என்று சட்டசபையில் முதல்வர் என்ற முறையில் ஜெயலலிதா அறிவித்த போதிலும், அவர்களை அழைத்துப் பேசாதது மட்டுமல்லாது, அதிரடி சட்டங்களை பிரயோகித்து அவர்களை அடக்கி ஒடுக்கவும், நிர்வாகிகளை கைது செய்யவும், ஆயிரக்கணக்கானவர்களை பணி நீக்கம் செய்யவுமான அடக்குமுறை கொடுமைகளை ஏவிவிட்டார். இந்த பிரச்சினை குறித்து சட்டசபையில் தரப்பட்ட ஒத்திவைப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்று எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருந்த துரைமுருகன் 25.10.2002 அன்று வற்புறுத்தினார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா ஜேக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் தன்னை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், அப்போது பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் போராட்ட குழுவினரிடம் போராட்டத்தை கைவிட்டு விட்டு வந்தால்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறி அவர்களை சந்திக்கவே மறுத்துவிட்டார். இந்தப் பிரச்சினை குறித்து தொடர்ந்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதடு மட்டுமில்லாமல் திமுக உறுப்பினர்களையெல்லாம் அவையை விட்டே வெளியேற்றினர்.
ஆசிரியர், அரசு அலுவலர் போராட்டத்தில் கலந்துகொண்டு மறியலில் ஈடுபட்ட பொள்ளாச்சி நம்பியமுத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் காசிப்பாண்டியன் தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து மாண்டார். தேனி மாவட்டம், பெரியகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவதானப்பட்டி மஞ்சளாறு அணைப்பகுதியில் ஆசிரியராக பணியாற்றி கொண்டிருந்த அப்துல் சத்தார் அதிமுக அரசின் அராஜகத்தைக் கண்டித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த இரண்டு குடும்பங்களுக்கும் திமுக அறக்கட்டளை சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி அளிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியிலே பத்து நாட்களாக நடைபெற்று வந்த அரசு அலுவலர் போராட்டம் அதற்குமேல் தொடர முடியவில்லை. அரசாங்கம் தன் அராஜகப் பிடிவாதத்திலிருந்து இறங்கிவர மறுத்தது. போராட்டம் நடத்திய சங்கத் தலைவர்கள் தங்களை அரசு அழைத்துப்பேச வேண்டுமென்று தொலைபேசி வாயிலாக கூறிக்கொண்டேயிருந்தார்கள். ஆனால் ஜெயலலிதாவோ இனி பேச ஒன்றும் இல்லை, பணிக்குத் திரும்பாவிட்டால் எஸ்மா'' பாயும், பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று உருட்டி மிரட்டி கொண்டேயிருந்தார்.
போராட்டம் நடத்திய நாட்களுக்கு ஊதியம் கிடையாது என்று முதலில் கூறிய அரசு, அந்த நாட்களை விடுமுறை நாட்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமென்று அறிவித்தது. வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும், சஸ்பெண்டு' உத்தரவுகள் ரத்து செய்யப்படும் என்றும், பழிவாங்கும் நடவடிக்கைகள் இருக்காது என்றும் அளித்த உறுதிமொழிகளையேற்று போராட்டம் கைவிடப்பட்டது. 1997-ம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது பத்தாயிரம் சாலை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 2001-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில், நிதி நெருக்கடி என்று போலிக் காரணம் கூறி, சாலை பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அந்தச் சாலை பணியாளர்களுக்கு மீண்டும் திமுக ஆட்சியில் பணி தரப்பட்டு அவர்கள் வேலைபார்த்து கொண்டிருக்கின்றார்கள். அந்த சாலை பணியாளர்கள்தான் அதிமுக ஆட்சியிலே தாங்கள் வேலையில்லாமல் இருந்த 41 மாதங்களை பணியிலே இருந்ததாக கணக்கிலே கொள்ள வேண்டுமென்று கேட்டு சென்னையிலே நேற்று உண்ணாவிரதம் இருந்தார்கள். அந்தச் சாலைப் பணியாளர்கள் உண்ணாவிரதம் இருக்க முக்கிய காரணமே ஜெயலலிதா ஆட்சி தான். நேற்றைய தினம் அவர்கள் காவலர்கள் தடுத்தும் கேளாமல் புதிய தலைமைச்செயலகத்திற்குள் நுழைந்திட முற்பட்டபோதுதான் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.
தலைமைச்செயலகத்திலிருந்து மதியம் வீட்டிற்கு நான் புறப்பட்டபோது, சாலை பணியாளர்களை பற்றிய செய்தி எனக்கு கூறப்பட்டவுடன், நான் என் காரை நிறுத்தி, என்னுடைய பாதுகாப்பிற்காக வந்து கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகளை அழைத்து நேராக சாலைப்பணியாளர்களும், மற்றும் அவர்களோடு இணைந்து ஒரு சில அலுவலர்களும் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கே நேராக சென்று அவர்களின் பிரதிநிதிகளை என்னை சந்திக்க செய்யுமாறு கூறச்செய்தேன். அவர்களும் அவ்வாறே அந்த அலுவலர்களிடம் சென்று பேசி, அவர்களின் பிரதிநிதிகள் ஐந்தாறு பேரை என் இல்லத்திற்கே அழைத்து வந்தார்கள்.
அந்த ஐந்தாறு பேரிடம் அரசின் மூத்த அதிகாரிகளை என் வீட்டிற்கே அழைத்து அந்த அலுவலர்களிடம் பேச செய்தேன். பின்னர் அவர்கள் என்னை சந்தித்தபோது படித்தவர்களாகிய நீங்கள் இப்படி செய்யலாமா என்று கூறிவிட்டு, பின்னர் நிகழ்ச்சிகளிலே கலந்து கொள்ள சென்றேன். இதைப்பற்றி எதுவும் தெரியாத ஜெயலலிதா விரைவில் தேர்தல் வரப்போகிறது என்றதும், அவசர அவசரமாக விடுத்துள்ள அறிக்கையில் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அழைத்துப்பேச வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.
அவருடைய ஆட்சிக்காலத்தில் அரசு அலுவலர் சங்கப்பிரதிநிதிகளை அழைத்துப்பேசுவதாக கூறியபடி பேச மறுத்தவர், அந்த அரசு அலுவலர்களையெல்லாம் நள்ளிரவில் அவர்கள் வீடு புகுந்து கைது செய்து சிறையிலே அடைத்தவர், அந்த அரசு அலுவலர்கள் நீதிமன்றங்களில் முறையிட்டபோதும் அவர்களை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுத்தவர் தற்போது நான் என் வீட்டிற்கே அரசு அலுவலர் சங்கப்பிரதிநிதிகளை அழைத்துப் பேசியதைப்பற்றி தெரிந்துகொள்ளாமலே அவர்களை அழைத்துப்பேச வேண்டுமென்று அறிக்கை விடுகிறார் என்றால், அந்த அரசு அலுவலர்களே சிரிக்க மாட்டார்களா? கடந்த 25-ம் தேதி அன்று தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பிலும், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம ஊழியர் சங்கத்தின் சார்பிலும், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பிலும், தமிழ்நாடு நில அளவைத்துறை சங்கங்களின் சார்பிலும் அதன் கூட்டமைப்பு நிர்வாகிகள் தனித்தனியாக வந்து என்னை நேரில் சந்தித்ததோடு, திமுக அரசு, அதன் அலுவலர்களுக்காக தொடர்ந்து செய்து வரும் நற்காரியங்களுக்காக நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, அவர்களது எஞ்சியுள்ள கோரிக்கைகளை அரசு பரிசீலிப்பதாக உறுதி அளித்ததின் அடிப்படையில் தங்கள் போராட்டங்களை உடனடியாக திரும்ப பெற்று பணிக்கு திரும்புவதாக முடிவு செய்திருப்பதாகவும் என்னிடம் கூறிச் சென்றார்கள். அந்த செய்தி பத்திரிகைகளிலும் நேற்று முன்தினம் வெளிவந்துள்ளது.
அரசு அலுவலர்களின் மிகப்பெரிய சங்கமான அரசு அலுவலர் ஒன்றியத்தின் தற்போதைய தலைவரான இரா.சண்முகராஜனும், அவரது சங்க நிர்வாகிகளும் என்னைச்சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, நேற்று அவர்கள் சங்கத்தின் சார்பில் பத்திரிகைகளில் வெளியிட்டுள்ள அறிக்கையிலும், தமிழகத்தில் 5-ம் முறையாக ஆட்சிப்பொறுப்பேற்று செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழக முதல்வர் கலைஞர், தமிழக மக்கள் அனைவரும் நலமோடும், வளமோடும் வாழவேண்டும் என்பதை குறிக்கோளாக, அடிப்படையாக கொண்டு பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்.
தமிழக அரசில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், ஒளியையும் ஏற்படுத்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வைத்துள்ளார் என்று தெரிவித்திருப்பதோடு, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதென்றும், ஆனால் அந்த சங்கத்தின் மாநில நிர்வாகிகள் என்னை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை அடிப்படையில் தங்களின் பத்து அம்ச கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்படும் என்றும், அவற்றின் மீது சாதகமான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தமிழக முதல்வர் அளித்த உறுதிமொழியை ஏற்று ஒருநாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் ரத்து செய்யப்படுகிறது என்றும் கூறி அதற்காக நன்றி தெரிவித்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்த செய்திகளையெல்லாம் மறைத்து விட்டு, அரசு அலுவலர்களின் அபிமானத்தை கொஞ்சமாவது பெற முடியாதா என்ற நப்பாசையில் ஜெயலலிதா அறிக்கைவிட்டு, அந்த அலுவலர்கள் அதிமுக ஆட்சியிலே பட்ட சிரமங்களையெல்லாம் நினைவுபடுத்தி, நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப்போல நடந்து கொண்டிருக்கிறார். ஜெயலலிதா தனது அறிக்கையிலே சத்துணவு ஊழியர்கள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இந்த ஆட்சியில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவு பணியாளர்கள் பயன்பெறவேண்டும் என்பதற்காக காலமுறை ஊதியம் அளித்ததோடு ஓய்வூதியம் தரவும் ஒப்புக்கொண்டிருக்கின்றோம்.
ஜெயலலிதாவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எஸ்மா, டெஸ்மா சட்டங்களை நீக்கி அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்கியதோடு 1.1.2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக 11 ஆயிரத்து 93 கோடி ரூபாய் அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு நிலுவைத்தொகையாக மட்டும் அனுமதிக்கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டிருப்பதே இந்தக்கழக ஆட்சியிலேதான்.
ஊதியக் கமிஷன் பரிந்துரையிலே சில முரண்பாடுகள் இருப்பதாக அரசு அலுவலர்களின் சங்கங்கள் தெரிவித்த நேரத்தில் அதனையேற்று 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 200 கோடி ரூபாய் கூடுதல் செலவிலே ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளையேற்று அவற்றை 1.8.2010 முதல் நடைமுறைக்கு கொண்டு வந்தோம். ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்கி 163 கோடி ரூபாய் செலவில் கூடுதல் சலுகைகள் அளித்ததின் வாயிலாக 2 லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர்கள் பயன் பெற்றனர்.
அரசு அலுவலர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும், சத்துணவு பணியாளர்களுக்காகவும், அங்கன்வாடி ஊழியர்களுக்காகவும், சாலைப்பணியாளர்களுக்காகவும் திமுக அரசு செய்துள்ள சாதனைகளையெல்லாம் பட்டியலிடுவதென்றால் ஒருநாள் கடிதம் போதாது. அதையெல்லாம் மறைத்துவிட்டு ஜெயலலிதா தற்போது ஏதோ திடீரென்று அரசு அலுவலர்களிடம் அக்கறை கொண்டவரைப்போல அறிக்கை நாடகம் போட்டால் அதனை நம்பி ஏமாற இனியும் அவர்கள் தயாராக இல்லை.
கிடப்பதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத்தூக்கி மனையிலே வை என்பதைப்போல ஜெயலலிதா உண்மை நிலைமைகளை மறைத்து விட்டு, என்னையும், என் குடும்பத்தினரையும் கைது செய்ய வேண்டும், விசாரணை நடத்த வேண்டுமென்றெல்லாம் புலம்புகின்றார் என்றால் அதற்கு காரணம் இன்னும் சில நாட்களில் அவர் மீதான 66 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பு வழக்கிலே விசாரணை, தீர்ப்பு என்றெல்லாம் தன்மீது எங்கே சட்டத்தின் பாய்ச்சல் நிகழ்ந்துவிடுமோ என்கின்ற அச்சம்தான்! என்ன செய்வது? வினை விதைத்தவர்கள் வினையை அறுவடை செய்துதானே ஆகவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications