விவசாயிகளுக்காக திமுக அரசு செய்த சாதனைகள்-பட்டியலிட்டார் கருணாநிதி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடு விடுதலை பெற்றநாளை "கணக்குத் தீர்த்த நாள்'' என்றும் அந்த விடுதலைக்காக ஆண்டு தோறும் விழா எடுத்துக் கொண்டாடும் நாளை "கணக்குப் பார்க்கும் நாள்'' என்றும் அண்ணா கூறியதை நெஞ்சிலே நிறுத்தி அன்றாடம் பணி புரிந்து வரும் தி.மு.க. ஆட்சி ஐந்தாவது முறையாக 2006-ம் ஆண்டு மே திங்களில் பதவிப் பொறுப்பேற்று கடந்த ஐந்தாண்டு காலமாக மக்கள் பணியே மகேசன் பணி என்ற உணர்வோடு விடிகின்ற ஒவ்வொரு நாளிலும் மக்களுக்கு இன்று என்ன செய்யலாம், என்ன திட்டங்களை நிறைவேற்றலாம் என்ற எதிர்பார்ப்போடு அதிகாரிகளோடு விவாதித்து சாதனைகளையும், திட்டங்களையும் ஆற்றி வருவதை தமிழ் நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.
2006-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டு மக்களிடம் சென்று, நீங்கள் எங்களுக்கு வாக்களியுங்கள், நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் இன்னின்ன திட்டங்களை உங்களுக்காக ஆற்றிடுவோம், "சொன்னதைச் செய்வோம், செய்வதைப் சொல்வோம்'' என்று உறுதிமொழி தந்து, மக்களும் அதை நம்பியேற்று பதவிக் கட்டிலிலே மக்கள் நம்மை அமர்த்திய பிறகு, 2011-ல் மீண்டும் தமிழ்நாட்டு மக்களைச் சந்திக்கப் போகும்போது, 2006-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் நாம் அவர்களுக்கு அளித்த உறுதி மொழிகளை நிறைவேற்றினோமா, மேலும் என்னென்ன திட்டங்களை மக்களுக்காக எந்தெந்த துறைகளின் சார்பாக நிறைவேற்றியிருக்கிறோம் என்று கணக்குக் காட்டவேண்டிய நிலையில் தற்போது நான் இருக்கின்றேன்.
2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு முடிகின்ற வரையில் உள்ள இந்தக் காலக்கட்டத்தில் எந்தெந்த துறைகளின் வாயிலாக என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன, என்னென்ன சலுகைகள் வழங்கப்பட்டன என்பதை நேரம் கிடைக்கின்றபோது உனக்குத் தெரிவிக்கின்றேன். இதனை நாட்டுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டிய பொறுப்பு உனக்கும், உன் போன்ற உடன்பிறப்புக்களுக்கும் உள்ளது என்பதை நான் நினைவுபடுத்த வேண்டியதில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளில் தி.மு.க. அரசு செய்த சாதனைகளின் பட்டியலை தொகுத்துத் தருகின்றேன்.
2006-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தி.மு.க. சார்பில் தமிழக மக்களிடம் வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில் "சிறு, குறு விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட கூட்டுறவுக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வோம்'' என்று சொல்லியிருந்தோம். தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி பெற்று நான் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அதே நாளில் - அதே மேடையில் இருந்தவாறே விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட இந்தச் சலுகைக்கான கோப்பிலே நான் கையெழுத்திட்டதை தமிழக விவசாயிகள் மறந்திருக்க முடியாது.
அன்றைய தினம் நான் கையெழுத்திட்ட மூன்று கோப்புகளில் ஒன்றுதான் விவசாயிகளுக்கு சலுகைகளை அளிக்கக் கூடிய இந்தக் கோப்பு. அதன் காரணமாக விவசாயிகள் வாங்கிய 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு - 22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன.
விவசாயிகளுக்கான பயிர்க் கடன் வட்டி 2005-2006-ல் 9 சதவீதம் என இருந்ததை 2006-2007 கழக அரசில் 7 சதவீதமாகக் குறைத்து, 6,31,283 பேருக்கு 1250 கோடியே 62 லட்ச ரூபாயும்; 2007-2008-ல் 5 சதவீதமாகக் குறைத்து, 6,48,397 பேருக்கு 1393 கோடியே 97 லட்ச ரூபாயும்; 2008-2009-ல் 4 சதவீதமாகக் குறைத்து, 6,91,192 பேருக்கு 1570 கோடியே 99 லட்ச ரூபாயும்; 2009-2010-ல் பயிர்க்கடன் களை முறையாகத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை முற்றிலும் ரத்து செய்த புரட்சிகரமான திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முதலாக அறிவித்து, 8,98,540 பேருக்கு 2169 கோடியே 48 லட்ச ரூபாயும்; நடப்பு நிதி ஆண்டில் (2010 - 2011) 15.2.2011 வரை 8 லட்சத்து 1960 விவசாயிகளுக்கு 2453 கோடி ரூபாயும் என 2006-க்குப்பின் மொத்தம் 36 லட்சத்து 71 ஆயிரத்து 372 விவசாயிகளுக்கு 8,838 கோடியே 6 லட்ச ரூபாய் பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளன. தற்போது நிலுவையில் உள்ள மேலும் 2 லட்சம் பம்பு செட்டுகளுக்கு படிப்படியாக இலவச மின் இணைப்பு வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வேளாண் துறைக்காக 2001-2006 ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் 4 ஆயிரத்து 137 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு; 2006-2011 ஐந்தாண்டு கால கழக ஆட்சியில் 7 ஆயிரத்து 437 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு.
தமிழக நெல் விவசாயிகளின் நிலை உயர, மத்திய அரசு நெல்லுக்கு நிர்ணயிக்கும் விலையுடன் மாநில அரசின் சார்பில் மானியம் வழங்கி விவசாயிகளுக்கு உதவி வருகிறது. அந்த வகையில் 2006-2007-ல் சாதாரகம் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு விலை ரூ.580 என நிர்ணயம் செய்தது; கழக அரசு அதனை ரூ.620 என உயர்த்தியது. 2007-2008-ல் சாதா ரகம் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு விலை ரூ.745 என நிர்ணயம் செய்தது; கழக அரசு ரூ.795 என உயர்த்தியது.
2008-2009-ல் சாதா ரகம் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு விலை ரூ.900 என நிர்ணயம் செய்தது; கழக அரசு ரூ.1,000 என உயர்த்தியது. 2009-2010 மற்றும் 2010-2011-ல் மத்திய அரசு விலை 1,000 ரூபாய் என நிர்ணயம் செய்தது; கழக அரசு ரூபாய் 1,050 என உயர்த்தி வழங்கியது.
2005-2006-ல் அ.தி.மு.க. அரசு நெல்லுக்கு வழங்கிய கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூபாய் 600; கழக அரசு ஆண்டுக்காண்டு இதனை உயர்த்தி, 2009-2010-ல் சாதா ரக நெல் விலை 1,050 ரூபாய் என உயர்த்தி வழங்கி வருகிறது.
2006-2007-ல் சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு விலை ரூ.610 என நிர்ணயம் செய்தது; கழக அரசு அதனை ரூ.650 என உயர்த்தியது. 2007-2008-ல் சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு விலை ரூ.775 என நிர்ணயம் செய்தது; கழக அரசு ரூ.825 என உயர்த்தியது.
2009-2010-ல் 9.5 சத சர்க்கரை பிழிதிறன் உள்ள கரும்புக்கு மைய அரசு நியாய மற்றும் ஆதாய விலையாக 1,077 ரூபாய் 60 காசு என அறிவித்த போது கழக அரசு போக்குவரத்துக் கட்டணம் மற்றும் ஊக்கத் தொகை உட்பட டன் ஒன்றுக்கு 1,650 ரூபாய் என வழங்கியது.
பெரியாரின் பிறந்த நாளான 17.9.2006 அன்று திருவள்ளூரில் தொடங்கப்பட்ட நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டத்தின்கீழ் 1 லட்சத்து 78 ஆயிரத்து 796 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 853 ஏக்கர் நிலம் பண்படுத்தப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது; 7 லட்சத்து 74 ஆயிரத்து 386 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
உழவரும், நுகர்வோரும் பெரும்பயன் அடைந்திட 1999-ல் அறிமுகப் படுத்தப்பட்ட உழவர் சந்தைத் திட்டத்தின்கீழ் 2001 மே வரை 103 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டு மக்களின் பாராட்டுகளை ஈர்த்தன; அதன்பின் வந்த அ.தி.மு.க. அரசு உழவர் சந்தைத் திட்டத்தைச் சீரழித்திட; 2006-ல் இந்த அரசு மீண்டும் பொறுப்பேற்றபின் அவற்றுக்குப் புதுப்பொலிவூட்டி நடைமுறைப்படுத்தியதுடன் புதிதாக மேலும் 50 உழவர் சந்தைகள் திறக்கப்பட்டு, தற்போது மொத்தம் 153 உழவர் சந்தைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன; விவசாயிகளும், பொதுமக்களும் பயனடைகின்றனர்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில், மின்சாரம் விரயமாவதைத் தடுத்திட, சிறுகுறு விவசாயிகளுக்கு பழைய மின் மோட்டார்களுக்குப் பதிலாக இலவசமாக புதிய மின்மோட்டார்களும்; பெரிய விவசாயிகளின் பம்பு செட்டுகளில் உள்ள பழைய மின் மோட்டார்களுக்குப் பதிலாக 50 சதவீத மானியத்தில் புதிய மின் மோட்டார்களும், 5 ஆண்டுகளில் மாற்றி அமைக்கப்படும் என்றும் கடந்த சுதந்திர தின நாள் விழாவில் அறிவிக்கப்பட்டதை விரைந்து நிறைவேற்றிட ஆயத்தப் பணிகள் நடைபெறுகின்றன.
ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் பழைய பம்பு செட்டுகளுக்கு பதிலாக 50 சதவீத மானியத்தில் புதிய பம்பு செட்டுகள் வழங்கும் திட்டத்தில் 2006-ம் ஆண்டு முதல் 62 ஆயிரத்து 772 பழைய பம்பு செட்டுகளுக்கு பதிலாக புதிய பம்பு செட்டுகள் வாங்க 39 கோடியே 57 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2007-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிலவிய வறட்சி மற்றும் டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும், 2008-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தாலும், 5 லட்சத்து 95 ஆயிரம் ஏக்கர் நெற்பரப்பு பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தேசிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 282 கோடியே 63 லட்சம் ரூபாய் இழப்பீடாகவும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின்கீழ் 213 கோடியே 80 லட்சம் ரூபாய் நிவாரணமாகவும், ஆக மொத்தம் 496 கோடியே 43 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டை விட 2008-2009-ம் ஆண்டில் கூடுதலாக 2 லட்சத்து 93 ஆயிரம் ஏக்கரில் ராஜராஜன் 1000 தொழில்நுட்பத்தைப் பின்பற்றிய காரணத்தால் அரிசி உற்பத்தியில் பின்னடைவு ஏதுமில்லாமல் 51 லட்சத்து 83 ஆயிரம் மெட்ரிக் டன் பெற முடிந்தது. இயற்கை சீற்றத்தினால் கூடுதலான பரப்பு பாதிப்புக்கு உள்ளானபோதும் உற்பத்தி அதிகமாக பெற முடிந்தது.
ராஜராஜன் 1000 தொழில்நுட்பத்தினால் 30 முதல் 40 சதவீதம் மகசூல் அதிகரித்துள்ளதை உலக வங்கி நிதியின்கீழ் செயல்படுத்தப்படும் நீர்வள, நிலவளத் திட்டத்தின் குழு ஆய்வு அறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜராஜன் 1000 திட்டத்தின்கீழ், இதுவரை 3 லட்சத்து 63 ஆயிரம் கோனோ களையெடுக்கும் கருவிகளும், 2 லட்சத்து 43 ஆயிரம் மார்க்கர்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.
ஊரகப் பகுதிகளுக்கு திமுக குறி?
சட்டசபைத் தேர்தலையொட்டி திமுக அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் முதல்வர் கருணாநிதியின் இந்த அறிக்கை விளங்குகிறது. திமுக அரசு செய்துள்ள பல்வேறு சாதனைகளை முதல்வர் கருணாநிதி தினசரி பட்டியலிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தனது முதல் சாதனைப் பட்டியலில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்த பலவற்றை பட்டியலிட்டுள்ளார் கருணாநிதி. இதன் மூலம், ஊரகப் பகுதி வாக்காளர்களுக்கு திமுக முக்கியத்துவம் கொடுப்பதாக கருதப்படுகிறது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications