திமுக கூட்டணி 200 இடங்களில் வெல்லும்-அழகிரி

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம் & சிவகாசி: திமுக கூட்டணி 200 இடங்களில் வெல்லும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் அலிக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்ட தேர்தல் பணி ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பேசிய தென் மண்டல திமுக செயலாளரும், மத்திய அமைச்சருமான அழகிரி,

கடந்த தேர்தலில் திமுகவினர் எப்படியெல்லாம் வியர்வை சிந்தி உழைத்து கூட்டணி வேட்பாளரான அசன் அலியை வெற்றி பெறச் செய்தீர்களோ, அதே போல மீண்டும் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். திமுக தேர்தல் களத்தில் இறங்கினாலே வெற்றி ஒன்று மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டும். வேறு எந்த கருத்து வேறுபாடுகளுக்கும் இடமளிக்க கூடாது.

தேர்தல் வெற்றி குறித்து நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அசன் அலிக்கு கை சின்னத்தில் வாக்களித்து 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். சொன்னதை செய்பவர்கள் திமுகவினர். தொண்டர்கள் வீடு, வீடாக சென்று கலைஞரின் சாதனைகளை எடுத்துச் சொல்லி ஓட்டு கேட்க வேண்டும். தப்பித் தவறி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் திமுகவின் இலவச நலத்திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்படும் என்பதையும் சொல்ல வேண்டும்.

வேட்பாளரை எதிர்பார்க்காமல் தொண்டர்கள் தினமும் ஒவ்வொரு பகுதியாக சென்று ஓட்டு சேகரிக்க வேண்டும். தொண்டர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உழைக்க வேண்டும்.

மக்களுடன் கூட்டணி என்று பேசிய விஜயகாந்த் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து பகலில் ஒன்றும், இரவில் ஒன்றுமாக பேசுகிறார். பொதுமக்கள் மத்தியில் வேட்பாளரையே அடித்து உதைக்கிறார். திமுக கூட்டணியில் எல்லா கட்சி தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்து பிரசாரம் செய்வது போல் அ.தி.மு.க. கூட்டணியில் எல்லா கட்சி தலைவர்களும் ஒரே மேடையில் பேசாதது ஏன்?

முரண்பாடுகளுடன் கூடிய அந்த கூட்டணி உடைந்து சிதறி விடும். இந்த தேர்தலில் 200 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

'நிதானம்' இல்லாத விஜய்காந்த்-ஸ்டாலின்:

இந் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்த துணை முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,

திமுக தலைமையிலான கூட்டணி, மக்கள் கூட்டணி, கெளரவமான கூட்டணி. தலைவர் கலைஞர் மற்ற கூட்டணி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரசாரக் கூட்டங்களை நடத்தி கொண்டு இருக்கிறார்.

ஆனால், மாற்று அணியில் மிகப் பெரியக் குழப்பம் இருக்கிறது. ஜெயலலிதா எந்த கூட்டணி கட்சித் தலைவரோடும் சேர்ந்து எந்த இடத்திலும், பிரசாரத்தை மேற்கொள்ளவில்லை. புதிதாக ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்துள்ள முன்னாள் கதாநாயகன், நான் எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியுடன் தான் கூட்டு வைத்துள்ளேன் என்று தெரிவித்து வருகிறார்.

இப்படி அந்த கூட்டணியில் உள்ள ஒவ்வொரு தலைவரிடையேயும், முரண்பாடுகள் மேலோங்கி இருக்கின்றன. ஜெயலலிதா அதிமுக மேடையில், அந்த முன்னாள் கதாநாயகனை ஒரு முறையாவது ஏற்றுவாரா?. இப்படிப்பட்ட நிலையில் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மைகளை செய்துவிடுவார்கள்.

ஒரு அரசியல் தலைவர் தனது கட்சியின் வேட்பாளர் பெயரை தவறுதலாக மாற்றிச் சொல்வதும் மற்றவர்கள் அதை திருத்திக் கூறும்போது சரியாக மாற்றிக் கொள்வது என்பதும் ஒரு சாதாரண விஷயம் தான். அப்படி ஒரு சிறிய தவறை சுட்டிக்காட்டிய தனது கட்சியின் வேட்பாளரை பொது மக்கள் மத்தியில், ஒரு பொது இடத்தில் அடித்து உதைப்பவர் எப்படி ஒரு சிறந்த தலைவராக இருக்க முடியும். தமிழ்நாட்டு மக்கள் தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த அளவிற்கு நிதானம் இழந்து செயல்படுகின்ற, மார்க்கெட் இழந்து போன அந்த நடிகரும், 10 வருடங்கள் ஆட்சிப் பொறுப்பிலே இருந்து தமிழ் நாட்டிற்கு ஒன்றுமே செய்யாத ஜெயலலிதாவும் சேர்ந்து எப்படி தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்து செல்வார்கள்?.

முதல்வர் கருணாநிதி சொன்னதைத் தான் செய்வார், செய்வதைத் தான் சொல்வார் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

ஆனால், 10 வருடங்கள் தமிழ்நாட்டை ஆண்ட ஜெயலலிதா செய்த சாதனை தான் என்ன?. ஜெயலலிதாவின் செயல்பாட்டிற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன், 1996-2001ம் ஆண்டில் கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது சென்னையில் பத்து மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டு அதில் ஒன்பது பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன. ஒரே ஒரு பாலம் பெரம்பூரில் தொழில்நுட்ப சிக்கல்களால் முழுவதுமாக கட்டப்படவில்லை.

2001-2006ம் ஆண்டுவரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த 5 வருடகாலமும் ஜெயலலிதா அந்த பெரம்பூர் மேம்பாலத்தை கட்டி முடித்து, அதை பொது மக்கள் பயன்படுத்துவதற்கு ஒரு சிறு முயற்சியை கூட எடுக்கவில்லை. அப்படியே கிடப்பிலேயே போட்டிருந்தார்.

ஆனால், மீண்டும் 2006ம் ஆண்டு கலைஞர் ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு தான் அந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது ஒன்றே ஜெயலலிதா பொது மக்களை பற்றி சிந்திக்காதவர், மக்களை மதிக்காதவர் என்பதை தெளிவாக்கும்.

கலைஞரால் ரேசனில் வழங்கப்படுகின்ற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக உள்ள ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியை ஆடு, மாடு, கோழித் தீவனமாகத் தான் பயன்படுத்த வேண்டும் என்று பேசி ஏழை எளிய மக்களை கேவலப்படுத்தியவர் தான் இந்த ஜெயலலிதா. முதலமைச்சராக வர வேண்டும் என்று ஆசைப்படுகின்ற ஜெயலலிதா வானத்திலேயே பறந்து கொண்டு, மக்களை சந்திக்காமல் பிரசாரம் என்ற பெயரில் பாசாங்கு செய்து கொண்டு இருக்கிறார்.

இந்தியாவில் ஏன் உலக அளவில் யாரும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட மேடையிலேயே தேர்தலின் போது சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக சரித்திரம் இல்லை. ஆனால், கலைஞர் பதவி ஏற்ற அதே மேடையிலேயே ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி வழங்க முதல் கையெழுத்தையும், விவசாயிகளின் கடன் ரூ. 7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்து இரண்டாவது கையெழுத்தையும், சத்துணவில் 2 முட்டை என்பதற்கு மூன்றாவது கையெழுத்தையும் போட்டு, தான் எப்போதும் தமிழ்நாட்டு மக்களின் நலனைப் பற்றியே சிந்திப்பவர் என்பதை நிரூபித்துள்ளார் என்றார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+