திமுகவை எதிர்ப்பவர்களை வைத்துக் கொண்டு தேர்தல் கமிஷன் செயல்படுகிறது-ஜோதி குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவை எதிர்ப்பவர்களால், இந்திய தேர்தல் கமிஷன் இயக்கப்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞரான என்.ஜோதி குற்றம் சாட்டினார்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பட்டி ஜெகநாதன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் மக்களிடம் சோதனை நடத்தி எமர்ஜென்சி காலகட்டம் போல் தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. தேர்தல் கமிஷனின் நடவடிக்கை அனைத்தும் ஆளும் கட்சியான திமுகவுக்கு எதிரானதாக தெரிகிறது. மேலும் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் சில வழக்குகளில் ஆஜராகும் மூத்த வக்கீல் ஜி.ராஜகோபாலன், தேர்தல் கமிஷனின் வக்கீலாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை தேர்தல் கமிஷன் வக்கீலாக அனுமதித்திருக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்
ஜோதி ஆஜரானார். அப்போது நடந்த விவாதம்:

ஜோதி: தேர்தல் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதான். இதனால் மாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. சுய உதவி குழுக்கள் நடவடிக்கை, தொழில் புரிவோரின் போக்குவரத்து போன்றவற்றுக்கு தடை ஏற்படுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால் எல்லா தொழிலுக்கும் விடுமுறை அளித்துவிட முடியாது. பொதுவாக ஒருவரை பிடித்து விசாரிக்க வேண்டுமென்றால் அவரைப் பற்றி புகார் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் நடவடிக்கையில் அதெல்லாம் பின்பற்றப்படவில்லை.

தலைமை நீதிபதி இக்பால்: உதாரணத்துக்கு, ஒரு பஸ்சின் கூரையில் ரூ.5.25 கோடி பணம் வைக்கப்பட்டுள்ளது. அந்த பஸ்சில் இருந்த அனைவருமே ஓடிவிட்டனர். இதுபற்றி அதிகாரிக்கு தகவல் வந்தால், யாருடைய புகாரை வாங்கி வழக்கு பதிவு செய்யலாம்?

ஜோதி: இதற்கு பல முன் உதாரணங்கள் உள்ளன. புகார் செய்வதற்கு யாருமே இல்லாத சூழ்நிலையில் அந்த அதிகாரி தானே முன்வந்து புகார் பதிவு செய்யலாம். புகார் செய்வதற்கு அங்கு யாரும் இல்லை என்பதை வழக்கில் அவர் பதிவு செய்ய வேண்டும். பணம், பொருட்களை பறிமுதல் செய்வதற்கு தனி அறிவுரைகளை அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது. அதிக பணம்' வைத்திருந்தால் கைப்பற்றுங்கள் என்று அறிவுரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதிக பணம் என்பதை ரூ.10 ஆயிரமா? அல்லது ஒரு கோடி ரூபாயா? என்பதையெல்லாம் தேர்தல் கமிஷன் வரையறுக்கவில்லை. தமிழக மக்கள் அனைவரையுமே குற்றவாளிகளாக தேர்தல் கமிஷன் பார்க்கிறது.

தலைமை நீதிபதி: தமிழக மக்கள் அமைதியை விரும்புகிறவர்கள், நாகரீகம் தெரிந்தவர்கள், மதிப்பு மிக்கவர்கள். இங்குள்ள வக்கீல்களும் பொறுப்புடன் நடந்து கொள்கின்றனர். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகுதான் இவற்றில் சிறிது மாற்றம் தெரிகிறது.

ஜோதி: மக்கள் கொண்டு செல்லும் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்கின்றனர். அரசு நிறுவனம் மூலமாக விற்கப்படும் மதுவை வாங்கிச் செல்லும்போது அதை பறிமுதல் செய்வதில் என்ன நியாயம் உள்ளது?. வாழ்க்கை பாதுகாப்புக்காக உரிமத்துடன் வைக்கப்பட்டு இருக்கும் துப்பாக்கியையும், ஆயுதம் என்ற பெயரில் பறித்து விடுகின்றனர். பள்ளி, கல்லூரிக்கு செலுத்தவேண்டிய கட்டணத்தை பறிமுதல் செய்து பிள்ளைகளை படிக்கவிடாமல் தேர்தல் கமிஷன் செய்து விடுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்காக மக்களுக்கு உயர் அதிகார வர்க்கத்தினர் பதிலளிக்க தேவையில்லை. அவர்களுக்கு அதற்கான பொறுப்பு இல்லை. ஆனால் அவர்களிடம் அரசியல்வாதிகள் பதிலளிக்க வேண்டும்.

அரசியல்வாதிகளின் படம், சிலைகளை மூடுகின்றனர். காந்தியும் காங்கிரஸ் உறுப்பினர்தான். அதற்காக ரூபாய் நோட்டுகளில் உள்ள அவரது படங்களை தடை செய்ய முடியுமா? நாட்டை காப்பாற்றுகிறவர்கள் அரசியல்வாதிகள்தான். குற்ற முகாந்திரம் இருந்தால்தான் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என்று குற்றத்துக்கான சட்டங்கள் கூறுகின்றன. ஆனால் ஒருவரிடம் இருந்து எதையாவது கைப்பற்றிவிட்டு உடனே அவர் மீது எப்.ஐ.ஆரை பதிவு செய்கின்றனர். இதுவும் தேர்தல் கமிஷனின் அறிவுரைகளில் ஒன்று. எப்.ஐ.ஆர். பதிவான பிறகு அந்த நபரின் மானம், மரியாதை போய்விடுகிறது.

இதுவரை 48,000 எப்.ஐ.ஆர்களை பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பாதி பேர் குற்றவாளிகளாக்கப்பட்டு விட்டார்கள். தேர்தல் நடவடிக்கைகளில் சரியாக செய்ய இயலாவிட்டால் மெளனமாக இருந்துவிட வேண்டும். ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள், இறந்தோரை கொண்டு செல்லும் ஊர்தி என அனைத்து வாகனங்களையும் விடாமல் நிறுத்தி சோதனை செய்கின்றனர். புதுத் துடைப்பம் அதிகமாக பெருக்குகிறது.

நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தேர்தல் கமிஷன், தனது வக்கீலாக ஜெயலலிதாவின் வழக்குகளில் ஆஜரான வக்கீல் ராஜகோபாலனை வைத்திருப்பது ஏன்? தி.மு.க.வுக்கு எதிரானவர்களை வைத்து தேர்தல் கமிஷன் செயல்படுகிறது.

தேர்தல் கமிஷன் வழக்கறிஞர் ராஜகோபாலன்: இவர் கூறியது அனைத்தும் கற்பனை தவிர வேறொன்றுமில்லை. உண்மையிலேயே நடப்பது வேறு. ஏற்கனவே உள்ள சட்டத்தின்படிதான் செயல்படுகிறோம். எப்.ஐ.ஆர். பதிவு செய்வதில் அனுமானத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டுகிறார். குற்றவிசாரணை முறைச் சட்டத்தைத்தான் (சி.ஆர்.பி.சி.) நாங்கள் பின்பற்றுகிறோம்.

ஜோதி: ஆனால், தேர்தல் கமிஷன் அறிவுரையில், பறிமுதல் செய்யப்படும் பொருட்களை வைத்திருப்பவர்கள் மீது கட்டாயமாக எப்.ஐ.ஆர். போட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளதே. சி.ஆர்.பி.சி. அடிப்படையில் முகாந்திரம் இருந்தால்தானே எப்.ஐ.ஆர். பதிவு செய்ய முடியும்.

ராஜகோபாலன்: எனக்கு கட்சி சாயம் பூசுகிறார்கள். நான் கட்சியை சார்ந்தவன் அல்ல. ஜெயலலிதா தரப்பில் மட்டுமல்ல, அவருக்கு எதிராகவும் ஆஜராகி இருக்கிறேன். தேர்தல் கமிஷனுக்கு எதிராகக்கூட நான் ஆஜராக முடியும். எனவே என்னை இந்தந்த வழக்குகளில்தான் ஆஜராக வேண்டும் என்று யாரும் குறிப்பிட முடியாது. அது நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவது போன்றது. கோர்ட்டு அவமதிப்புக்கு உகந்த குற்றமாகும். எனவே மனுதாரரின் வாதத்தை எந்த வகையிலும் ஏற்கக்கூடாது.

முதலில் அவர்கள் கூறிய அலுவலர்களை மாற்றக்கூடாது என்றனர். பிறகு போலீஸ் அதிகாரிகளை மாற்றக்கூடாது என்றனர். தற்போது தேர்தல் கமிஷன் வக்கீலையும் அவர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலை வருகிறது. ஜெயலலிதா தரப்பில் ஜோதியும்தான் ஆஜரானார்.

ஜோதி: ஆனால் நான் தேர்தல் கமிஷனின் வக்கீலாகவில்லையே.

ராஜகோபாலன்: அதிமுகவில் இருந்தபோதும் எனக்கெதிராக வழக்கு நடத்தினார். இப்போது திமுகவில் இருந்து எனக்கெதிராக வழக்கு நடத்துகிறார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

இருதரப்பு விவாதத்தையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+