மை வைக்காமலே வாக்களித்த வீரபாண்டி ஆறுமுகம் மகள்!
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் கருணாநிதி இன்று காலை வாக்களித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரும் இன்று சென்னையில் வாக்களித்தனர்.
ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் ஜெயலலிதா, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
அதேபோல கொளத்தூரில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள பள்ளியில் வாக்களித்தார்.
ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சாலிகிராமம் காவேரி மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார். அவருடன் மனைவி பிரேமலதாவும் சென்று வாக்களித்தார்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடி, சிட்டலாச்சி கிராமத்தில் வாக்களித்தார். அமைச்சர் அன்பழகன்அண்ணாநகர் பள்ளியில் வாக்களித்தார்.
முதல்வர் கருணாநிதி ஒன்பதரை மணியளவில் வாக்களித்தார். கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளிக்கு வந்த அவர் அங்கு தனது வாக்கைச் செலுத்தினார். அவருடன் மனைவி தயாளு அம்மாளும் வாக்களித்தார்.
மேற்கண்ட தலைவர்கள் அனைவருக்கும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்களித்த பின் நிருபர்களிடம் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தா. பாண்டியன் அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் டி.வி.எஸ். காலனியில் உள்ள மீனாட்சி உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கைச் செலுத்தினார்.
ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அசோக் நகர் கன்னியப்பன் நகர் மாநகராட்சி பள்ளியிலும், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு அடையாறு பாப்பன்சாவடி காமராஜர் அவென்யூ 2-வது தெருவில் உள்ள சென்னை பள்ளியிலும் வாக்களித்தனர். இவர்கள் யாருக்கும் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் வாக்கு இல்லை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு, தேசிய செயலாளர் டி. ராஜா ஆகியோர் தியாகராயநகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள தக்கர்பாபா வித்யாலயாவிலும் வாக்களிகத்தனர்.
ரஜினி, கமல், வடிவேலு...
நடிகர்கள் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரி கல்லூரியிலும், கமலஹாசன் எல்டாம்ஸ் சாலையில் உள்ள சென்னை பள்ளியிலும், விஜய் அடையாறு காமராஜர் அவென்யூ 2-வது தெருவில் உள்ள சென்னை பள்ளியிலும், அஜித்குமார் திருவான்மியூர் மாநகராட்சி பள்ளியிலும், வடிவேலு சாலிகிராமம் காவேரி மேல்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனர்.
நடிகர் பிரசன்னா இன்று காலை எட்டு மணியளவில் வரிசையில் நின்று ஓட்டுப் போட்டார். ஏ வி எம் காலனியில் உள்ள 'புத்ரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்' தனது தாய் தந்தையுடன் சென்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். 50 பேர் ஓட்டுப் போடும்வரை பொறுமையாக காத்திருந்து தனது ஓட்டைப் பதிவு செய்தார் .
அலர்ஜி-மை வைக்காமலே வாக்களித்த வீரபாண்டி ஆறுமுகம் மகள்:
திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகள் நிர்மலா. அவர் வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட பூலாவரி கிராம வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார்.
தனக்கு விரலில் மை வைத்தால் அலர்ஜி ஏற்படும் என்று கூறி மை வைத்துக் கொள்ள எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து
மை வைக்காமலேயே அவர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications