லேடன் பலியானதால் ஏற்படும் விளைவுகளை சந்திக்கத் தயாராக வேண்டும்-இந்தியா
சென்னை: பெரும் பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் வைத்துக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து ஏற்படும் விளைவுகளை சந்திக்க தயாராக வேண்டும். இந்தியா அதற்குத் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
பின்லேடன் வீழ்த்தப்பட்டது குறித்து ப.சிதம்பரம், இந்தியாவின் சார்பில் முதலில் கருத்து வெளியிட்டார்.
அவர் கூறுகையில், இத்தனை காலமாக நாம் சொல்லி வந்தது நிரூபணமாகியுள்ளது. அதாவது, பாகிஸ்தானில்தான் தீவிரவாதிகள் அத்தனை பேரும் அடைக்கலம் பெறுகின்றனர். தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது என்று இந்தியா சொல்லி வந்தது. இன்று அது உண்மையாகியுள்ளது.
உடனடியாக தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட தீவிரவாதிகளையும், மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தீவிரவாதிகளையும் இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்.
பல்வேறு தீவிரவாத குழுக்களின் சரணாலயமாக பாகிஸ்தான் திகழ்கிறது. இது கவலை அளிப்பதாகும். பின்லேடன் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டதன் மூலம் மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பது உறுதியாகி விட்டது. தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருகிறது.
மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு காரணமாக பயங்கரவாதிகளை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்.
பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பெரும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். இந்தியா அதற்குத் தயாராக உள்ளது என்றார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications