தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்ய தடை கோரி வழக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலிருந்து மீண்டும் கோட்டைக்கு இடமாற்றம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் ஜி.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனு:

சென்னையில் 1640-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோட்டைதான் அதிகார மையமாக செயல்பட்டு வருகிறது. பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான இந்த கோட்டை, அரசு அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அரசுக்கு தேவையான முக்கிய அலுவலகங்கள் அனைத்தையும் இந்த கோட்டைக்குள் கொண்டு வரமுடியவில்லை என்பதால் ராணிமேரி கல்லூரி அமைந்துள்ள இடத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட புதிய தலைமை செயலகத்தை கட்ட முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆட்சியில் முடிவு செய்தார்.

இது சம்பந்தமாக சட்டசபை விதி 110-ன் கீழ் சட்டசபையில் அறிவிப்பை அவர் வெளியிட்டார். 110-ம் விதியின் கீழ் வெளியிடப்பட்டதால் அந்த அறிவிப்பை பற்றி யாரும் விவாதிக்க முடியாது.

ஜார்ஜ் கோட்டையில் அரசு அலுவலகங்கள் இயங்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையை பராமரிப்பதற்கே கோடிக்கணக்கில் செலவிட வேண்டியதிருப்பதாலும், அங்கு போதிய இடவசதிகள் மற்றும் நவீன வசதிகள் இல்லை என்பதாலும் தலைமைச் செயலகம் இடமாற்றம் செய்யப்படுவதாக காரணம் கூறப்பட்டது.

கலைவாணர் அரங்கம் இடிப்பு:

இந்த நிலையில் 2006-ம் ஆண்டு புதிய ஆட்சி அமைந்தது. சரியான வசதிகளைக் கொண்ட தலைமைச் செயலகத்தை அமைப்பதற்காக ஓமந்தூர் அரசினர் தோட்டத்தை முந்தைய அரசு தேர்வு செய்தது. இதற்காக அந்த பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டது.

ஆங்கிலேய கவர்னர் கன்னிமாரா பிரபு 1890-ம் ஆண்டு தொடங்கி வைத்த 118 ஆண்டுகள் பழைய கட்டிடத்தில் இயங்கும், சென்னையிலேயே முதல் போலீஸ் நிலையமான திருவல்லிக்கேணி போலீஸ் நிலையமும் அகற்றப்பட்டது.

மீண்டும் மாறுகிறது:

அந்த இடத்தில் ரூ.450 கோடிக்கு மதிப்பிடப்பட்டு, ரூ.1,100 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டி முடிக்கப்பட்டது. பிரமாண்டமான விழாவில் திறந்து வைக்கப்பட்ட அந்த கட்டிடத்தில் தலைமைச் செயலகம் மட்டுமல்ல, சட்டசபையும் இயங்குகிறது,

இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தை மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இதற்காக கோட்டை புதுப்பிக்கப்படுவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள், படங்கள் வெளியாகியுள்ளன.

ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை இயங்கி வந்த இடத்தில், பழைய அரசால் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நூலகத்தையும் மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் புத்தகங்கள் பாழாகின்றன. செய்திகளைப் பார்க்கும்போது, புதிய தலைமைச் செயலகத்தை அப்படியே கைவிடுவதற்கு இந்த அரசு முடிவெடுத்திருப்பது தெரிகிறது.

இது சட்டவிரோதமான, அங்கீகாரமற்ற, பொதுமக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கையாகும். பல கோடி பணத்தை போட்டு கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை அப்படியே விட்டுவிடுவது சரியான செயல்பாடு அல்ல.

தலைமைச் செயலகத்தை மாற்ற தேர்தல் நடக்கவில்லை

தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்வதற்காக இந்த தேர்தல் நடத்தப்படவில்லை. அதை இடமாற்றம் செய்வதுபற்றி தமிழக அரசு முடிவெடுக்கவில்லை. தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்வதற்கு யார் அதிகாரம் அளித்தது? என்பதை தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆகியோர் விளக்க வேண்டும்.

புதிய தலைமைச் செயலகத்தில் செயல்படுவது சரிதான் என்று அரசு எடுத்திருந்த முடிவு, திடீரென்று மாறுவதற்கு என்ன காரணம் என்பதற்கும் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்.

எனவே இந்த மனு மீதான விசாரணை முடியும்வரை, புதிய தலைமை செயலகத்தையும், சட்டசபையையும் ஜார்ஜ் கோட்டைக்கு இடமாற்றம் செய்யத் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+