சிபிஎஸ்இ +2 தேர்வில் சென்னை மண்டலம் முதலிடம்: மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி
சென்னை: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் நாட்டிலேயே சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக 91.32 சதவீத மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மாணவிகள் 490-க்கு மேல் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. 77 லட்சம் மாணவ-மாணவியர் தேர்வு எழுதியதில் 81.71 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, மகாராஸ்டிரா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், டாமன்-டையு ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் தான் அதிகபட்சமாக 91.32 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை மண்டலத்தில் 970 பள்ளிகளைச் சேர்ந்த 61 ஆயிரத்து 337 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 56 ஆயிரத்து 12 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.84 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை நங்கநல்லூர் மாடர்ன் சீனியர் செகண்டரி பள்ளி மாணவி எஸ்.திவ்யா 500-க்கு 492 மதிப்பெண்களும், மைலாப்பூர் பி.எஸ். சீனியர் செகண்டரி பள்ளி மாணவி கே.ஏ.சுமனா 491 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாணவி சுமனாவை பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர். அவரது தாய் சைலஜா அதே பள்ளியில் கணித ஆசிரியையாக பணி புரிகிறார். தந்தை ஸ்ரீதர் சேலம் இரும்பு எக்கு தொழிற்சாலையில் கூடுதல் பொதுமேலாளராக இருக்கிறார். மாணவி சுமனா தான் மருத்துவம் படிக்க விரும்புவதாக தெரிவித்தார்.
சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. பெண்கள் சீனியர் செகண்டரி பள்ளி மாணவி அபிநயா 489 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக வந்துள்ளார். அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மாணவிகள் லட்சுமி பாரதி, திவ்யா ஆகியோர் 482 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் முதலிடத்திலும், மாணவர் அரிகிருஷ்ணா 481 மதிப்பெண்களுடன் இரண்டாம் இதடத்திலும் உள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் சென்னை நகர்ப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு நேற்றே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெளியூர் மாணவ-மாணவிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தபால் மூலம் மதிப்பெண் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படுகிறது.
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவியர் முடிவு வெளியான நாளில் இருந்தே விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 3 வாரத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும். தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு வரும் ஜூலை மாதம் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வில் கோவை மண்டலத்தின் நான்கு பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளன.
4 கோவை பள்ளிகள் சாதனை
சூலூர், கேந்திர வித்யாலயா பள்ளியில் அறிவியல் பிரிவைச் சேர்ந்த 64 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில் அனைவரும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. சிறுவாணி சின்மயா வித்யாலயா பள்ளியில் அறிவியல் பிரிவில் 11 மாணவ, மாணவியரும், வணிகவியல் பிரிவில் 16 பேரும் என மெத்தம் 27 பேர் தேர்வெழுதினர். அவர்கள் அனைவருமே தேர்ச்சி பெற்றுள்ளனர். சாய்பாபா காலனி, அண்ணாமலை ரோட்டிலுள்ள அங்கப்பா பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். புலியகுளத்திலுள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் மொத்தம் 74 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோவை மண்டலத்தில் தேர்வு எழுதிய நான்கு பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி முதல்வர்களும், பெற்றோர்களும் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications