அல் ஜவாஹிரி-முல்லா ஒமரை ஒழித்துக் கட்ட பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உத்தரவு

பின்லேடனின் கூட்டாளியான அய்மான் அல் ஜவாஹிரி, ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் முல்லா ஒமர், கமாண்டர் சிராஜ் ஹக்கானி, லிபியாவின் அல்-கொய்தா தலைவர் அப்தெல் ரஹ்மான், மும்பை தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த இலியாஸ் காஷ்மீரி ஆகிய 5 பேரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் கடந்த 2 வாரங்களாக நடத்தி வந்த ஆலோசனைகளின் போது இந்தப் பட்டியலை அமெரிக்கா தந்தது.
நேற்று பாகிஸ்தான் வந்த அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் இந்தப் பட்டியலில் உள்ளோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் அதிபர் உள்ளிட்டோரிடம் வலியுறுத்தினார்.
இவர்கள் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், பாகிஸ்தானுக்குள் நுழைந்து பின்லேடனை சுட்டுக் கொன்றது போல தன்னிச்சையான முடிவை எடுக்க வேண்டி வரும் என்றும் பாகிஸ்தானிடம் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
உலகிலேயே மோசமான அண்டை நாடு பாக்-சிதம்பரம்:
இதற்கிடையே டெல்லி வந்துள்ள அமெரிக்க உள்துறை அமைச்சர் ஜேனட் நபோலிடனோ உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
அக் கூட்டத்தில் பேசிய சிதம்பரம், பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாகவே பயன்படுத்தி, ஊக்குவித்து வருகிறது பாகிஸ்தான். பயங்கரவாத கட்டமைப்புகளை ஊக்குவிப்பதை நாட்டின் முக்கிய கொள்கையாகக் கொண்டுள்ள இந்த நாடு இந்தியாவின் அண்டை நாடாக அமைந்துள்ளது தான் பெரிய பிரச்சனை.
சொல்லப்போனால் எங்களுக்கு அண்டை நாடாக அமைந்துள்ள பாகிஸ்தான் தான் உலகிலேயே மிகவும் மோசமான அண்டை நாடு என்று சொன்னால் கூட அது மிகையாகாது.
சர்வதேச அளவில் பயங்கரவாதிகள் உருவாகும் இடமாகவும், உலக பயங்கரவாதத்தின் மையமாகவும் இந்தியாவின் பக்கத்து நாடு உள்ளது. பயங்கரவாதிகளுக்கு போதிய கட்டமைப்பு வசதிகளை செய்து தருவது அந்நாட்டு கொள்கையாகவே உள்ளது. இதுபோன்ற நிலைமையை சமாளிப்பது எளிதானதல்ல.
பாகிஸ்தானை மையமாகக் கொண்டு பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. பயங்கரவாத செயல்பாடுகளால் அந்நாட்டின் பொருளாதார பலம் சரிவடைந்து வருவதுடன் ஸ்திரமற்ற நிலையும் நிரந்தரமாகி வருகிறது. மேலும் அரசு என்கிற அமைப்பும் நொறுங்கி வருகிறது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் பிரச்சனைதான்.
அந்த நாட்டில் ஸ்திரமான அரசியல் சூழல் நிலவவும், பொருளாதார மேம்பாட்டுக்கு உதவவும் இந்தியா தயாராக உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்காவின் ஒத்துழைப்பு மிக அவசியம். மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் அமெரிக்கா தீவிரம் காட்டுவதை பாராட்டுகிறோம் என்றார்.
அல்-கொய்தாவும் லஷ்கரும் ஒன்றே-ஜேனட்:
கூட்டத்தில் அமெரிக்க அமைச்சர் ஜேனட் பேசுகையில், பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாத இயக்கம் அல் கொய்தாவைப் போலவே மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. மும்பை தாக்குதலில் தொடர்புடைய டேவிட் ஹெட்லி, ரானா ஆகியோர் இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
எங்கள் கண்ணுக்கு அல்-கொய்தாவும் லஷ்கர் இயக்கமும் ஒன்றாகத்தான் தெரிகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications