பீரில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்த காதலர்கள்
கோவை: மதுக்கரை வனப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட காதலர்களின் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
காதல்
கோவை நவக்கரையைச் சேர்ந்த பழனிச்சாமி திருமணமானவர். இவரது மனைவி இவரை பிரிந்து சென்றுவிட்டார். இவருக்கும் நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சரஸ்வதிக்கும் காதல் ஏற்பட்டது. சரஸ்வதி கணவனை இழந்தவர். இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ ஆரம்பித்தனர்.
அழுகிய பிணங்கள்
தங்குவதற்கு நிலையான இருப்பிடம் இன்றி அடிக்கடி இடம் மாறிவந்த இந்த காதல் ஜோடியினை கடந்த 4 நாட்களாக காணவில்லை. இந்நிலையில் பழனிச்சாமியின் சகோதரி மதுக்கரை வனப்பகுதிக்கு வழக்கம்போல மாடு மேய்க்கச் சென்றுள்ளார். அந்தப் பகுதியில் கடும் துர்நாற்றம் அடித்துள்ளது. துர்நாற்றம் வரும் பகுதியில் இரண்டு பிணங்கள் அழுகிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பழனிச்சாமியின் சகோதரி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
தற்கொலை
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பிணங்களைக் கைப்பற்றினர். பிணங்களுக்கு அருகே இரண்டு பீர் பாட்டில்கள் கிடந்தன. விசாரணையில் பழனிச்சாமியும், சரஸ்வதியும் பீரில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. க.க.சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications