சொத்து விவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையர்கள்!

தேர்தலில் போட்டியிடுவோர் தான் தங்களது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்ற விதி உள்ளது. தேர்தல் ஆணையர்கள் அதை வெளியிடத் தேவையில்லை. ஆனால், அரசியல்வாதிகளிடம் சொத்து விவரங்களைக் கேட்கும் நிலையில் உள்ள தாங்களும் அதை வெளியிடுவதே நியாயமானது என்று முடிவு செய்த 3 தேர்தல் ஆணையர்களும் அதை வெளியிட்டுள்ளனர்.
தேர்தல் கமிஷன் இணையத் தளத்தில் இந்த விவரங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி குரேஷிக்கு குர்காவ்ன், ஆக்ரா, கிரேட்டர் நோய்டாவில் 3 இடங்கள் உள்ளன. 1980ம் ஆண்டில் குர்காவ்ன் நகரில் இவர் ரூ. 63,089க்கு வாங்கிய நிலத்தின் இன்றைய மதிப்பு ரூ. 1.75 கோடியாகும்.
2006ம் ஆண்டு அரசுப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபோது கிடைத்த ரிடையர்மன்ட் பெனிபிட் பணம், பி.எப். பணம், வங்கிக் கடன் ஆகியவை மூலம் நோய்டாவில் ரூ. 36 லட்சத்துக்கு நிலம் வாங்கியுள்ளார். தனது சேமிப்பின் மூலம் ஆக்ராவில் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள நிலம் வாங்கியுள்ளார்.
சம்பத் 1986ம் ஆண்டு ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ரூ. 47,009க்கு வாங்கிய நிலம்-வீடு இப்போது ரூ. 2 கோடி மதிப்பு கொண்டது. இதிலிருந்து ஆண்டுக்கு ரூ. 7.5 லட்சம் வாடகை வருகிறது. ஆந்திராவின் குட்டலா பேகம்பேட்டில் 1991ம் ஆண்டு ரூ. 68,500 செலவில் ஒரு வீடும் கட்டியுள்ளார். இதன் இப்போதைய மதிப்பு ரூ. 95 லட்சம். இந்த வீடு மூலம் ஆண்டுக்கு ரூ. 3.6 லட்சம் வருமானம் வருகிறது.
ஹைதராபாத்தில் யெல்லாரெட்டிகுடா பகுதியில் ரூ. 18 லட்சம் மதிப்பு கொண்ட நிலத்தை இவர் வாங்கியுள்ளார். இதன் இப்போதைய மதிப்பு ரூ. 40 லட்சமாகும்.
பிரம்மாவுக்கு தனது அஸ்ஸாம் மாநிலம் கோக்ரஜாரில் 40 பிகா விவசாய நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ. 8 லட்சம். இது தவிர கோசாய்காவ்ன் நகரில் ரூ. 5 லட்சம் மதிப்பு கொண்ட வீடு உள்ளது.
1989ம் ஆண்டு ஹைதராபாத்தில் ஹவுசிங் சொசைட்டி மூலம் ரூ. 8 லட்சத்துக்கு இவர் வாங்கிய நிலம்-வீடு இப்போது ரூ. 3.8 கோடி மதிப்பு கொண்டது. இதிலிருந்து மாதம் ரூ. 1 லட்சம் வாடகை வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இவர்களது குடும்பத்தினரின் சொத்து மதி்ப்பு குறித்து அதில் தகவல் ஏதும் இல்லை.












Click it and Unblock the Notifications