கிருஷ்ணா நீரை திறந்துவிட ஆந்திராவுக்கு ஜெயலலிதா கோரிக்கை
சென்னை: சென்னை நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க கண்டலேறு நீர்த் தேக்கத்தில் இருந்து கிருஷ்ணா நீரைத் திறந்து விட வேண்டும் என்று கோரி ஆந்திர மாநில அரசுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
ஆந்திரா முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த தண்ணீர் இருப்பு கொள்ளளவு 11 டி.எம்.சி. ஆகும். ஆனால், தற்போது 6 டி.எம்.சி. அளவுதான் தண்ணீர் இருப்பு உள்ளது.
அக்டோபர் மாதம் வரையான காலத்திற்கு இந்த தண்ணீர் இருப்பு போதாது. 2010-2011ம் ஆண்டில் ஆந்திரா மாநிலம், தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. அளவு தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகம் பெற்றது 4.6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே.
ஆந்திராவில் கிருஷ்ணா குடிநீர் வழங்கல் திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் தற்போது தண்ணீர் இருப்பு நன்றாகவே உள்ளது. இந்த நிலையில், சென்னை நகரின் குடிநீர் தேவையைப் போக்கும் வகையில் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது ஆந்திர அரசுக்கு சிரமமாக இருக்காது.
எனவே, வரும் அக்டோபர் மாதம் வரை சென்னை நகரின் குடிநீர் தேவையை சமாளிக்கும் வகையில் கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லைக்கு குறைந்தபட்சம் ஆயிரம் கன அடி நீர் தண்ணீரை உடனடியாக திறந்துவிட தாங்கள் உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications