காங். தலைவர் ஜனார்த்தன் திவிவேதி மீது ஷூ வீச முயன்றவர் கைது

நேற்று டெல்லியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திவிவேதிக்கு அருகே அமர்ந்திருந்த ஒரு செய்தியாளர் எழுந்து காங்கிரஸின் முக்கிய எதிரியாக இதுவரை பாஜக இருந்தது. தற்போது அந்த இடத்தை ராம்தேவ் பிடித்து விட்டதாக கருதுகிறீர்களா என்று கேட்டார். அதற்கு திவிவேதி பதிலளிக்கவில்லை.
இதையடுத்து சட்டென்று எழுந்த அந்த நபர் தனது ஷூவைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டு, இப்படி ஷூவைக் காட்டினால்தான் பதிலளிப்பீர்களா என்று கோபத்துடன் கேட்டார். இதனால் திவிவேதி அதிர்ச்சி அடைந்தார். அந்த நபர் ஷூவை வீசி விடாமல் தடுக்கும் வகையில் கையைக் காட்டித் தடுத்தார்.
உடனடியாக பாதுகாவலர்கள் விரைந்து வந்து அந்த நபரைப் பிடித்து வெளியே இழுத்துச் சென்றனர். காங்கிரஸாரும் அந்த நபரைப் பிடித்து சரமாரியாக அடித்தனர்.
பின்னர் அவரை பத்திரமாக போலீஸார் வெளியே கொண்டு சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் பெயர், சுனில் குமார் என்றும் தெரிய வந்தது. நவ் சமாச்சார் என்ற பத்திரிக்கையில் முன்பு அவர் பணியாற்றியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து விலகி விட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜுனு என்ற இடத்திலிருந்து நேற்று முன்தினம் இரவுதான் அவர் டெல்லிக்கு வந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பின்னர் திவிவேதி கூறுகையில், இது திட்டமிட்ட தாக்குதல் என்று கூறினார்.
அதேசமயம், இது ஆர்எஸ்எஸ்ஸின் சதிதான் என்று கூறியுள்ளார் எப்போது பார்த்தாலும் சர்ச்சையாகவே பேசி வரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், ராம்தேவ் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த அதே மதவாத சக்திகள் இப்போது இந்த திட்டத்தையும் தீட்டியுள்ளது கண்கூடாகவே தெரிகிறது என்றார்.


Click it and Unblock the Notifications
