பிஇ கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவில் ஸ்குவாஷ் வீராங்கனை அனகா முதலிடம்
சென்னை: விளையாட்டு மற்றும் சிற்பபு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வில் ஸ்குவாஷ் வீராங்கனை அனாக முதலிடம் பிடித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் பொறியில் படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நாளை முதல் கலந்தாய்வு நடக்கிறது. இன்று விளையாட்டு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது.
விளையாட்டு வீரர்களுக்கு 100 இடங்கள் ஒதுக்கப்படும். அதற்கான கலந்தாய்வுக்கு 3 ஆயிரத்து 457 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அதில் வெறும் 350 பேர் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களாக சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் நடந்தன.
விளையாட்டு வீரர்- வீராங்கனைகளுக்கான இடஒதுக்கீட்டில் நாகர்கோவிலைச் சேர்ந்த “ஸ்குவாஷ்" வீராங்கனை அனகா அலங்காமணி முதல் இடம் பிடித்தார். அவருக்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கும் இடம் கிடைத்தது. ஆனால் அவர் பொறியாளராக விரும்புவதாகத் தெரிவித்தார். அவர் எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் என்ஜினியரிங் படிக்கவிருக்கிறார்.
2-வது இடத்தைப் பிடித்த மோகனப் பிரியா எம்.பி.பி.எஸ். படிப்பையும், 3-வது இடத்தைப் பிடித்த உசைன் சென்னை கிண்டி அரசு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பையும், 4-வது இடம் பிடித்த “செஸ்" வீராங்கனை சவீதா கிண்டி அரசு கல்லூரியில் இ.சி.இ. என்ஜினீயரிங் பிரிவையும், 5-வது இடம் பிடித்த அமுதராஜ் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பையும் தேர்வு செய்தனர்.
தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான சான்றிதழ்களை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் வழங்கினார்.
முதல் இடம் பிடித்த அனகா கூறுகையில், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தால் என்னால் விளையாட்டுத் துறையில் கவனம் செலுத்த முடியாது. எனக்கு விளையாட்டில் தான் அதிக விருப்பம். அதனால் தான் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்துள்ளேன் என்றார்.
விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான பொறியியல் கலந்தாய்வு இன்றுடன் முடிந்தது. இதில் கலந்து கொள்ள முடியாத விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பொது கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.
நாளை முதல் 6-ம் தேதி வரை தொழில் பிரிவு மாணவர்களுக்கும், ஜூலை 7-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 8-ம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்குகிறது.
தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு ஒதுக்கீட்டு இடத்திற்கான கடிதத்தை அமைச்சர் பழனியப்பன் வழங்குகிறார்.












Click it and Unblock the Notifications