திமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோற்றுப் போனோம்- புதுவை காங்கிரஸார் சோனியாவிடம் புலம்பல்
டெல்லி: திமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் படு தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. தனியாக போட்டியிட்டிருந்தால் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கலாம் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் தலைமையில் சோனியா காந்தியைச் சந்தித்து புலம்பியுள்ளனர்.
வைத்திலிங்கம் தலைமையிலான புதுச்சேரி காங்கிரஸ் குழுவினர் டெல்லி போயுள்ளனர். இந்தக் குழுவில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியனும் இடம் பெற்றுள்ளார். இவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து விளக்கினராம்.
அப்போது அவர்கள் சோனியாவிடம் கூறுகையில், திமுகவுக்கு தமிழகத்தில் நிலவி வந்த கடும் மக்கள் அதிருப்தி, புதுச்சேரியிலும் பரவி திமுகவுடன் கூட்டணி வைத்த காங்கிரஸை கடுமையாக பாதித்து விட்டது. திமுகவுடன் சேர்ந்ததால்தான் இந்த தோல்வி ஏற்பட்டது. தனியாகப் போட்டியிட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. திமுக மீதான ஊழல் புகார்களால் காங்கிரஸுக்குத்தான் கடும் பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்றனராம்.
திமுக தவிர பாமகவுடன் கூட்டணி சேர்ந்ததும் தங்கலுக்குப் பாதிப்பு ஏற்பட முக்கியக் காரணம் என்று காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவிடம் கூறினார்களாம்.
கூட்டணிக் கட்சிகளுக்கு முக்கியத் தொகுதிகளைக் கொடுக்க வேண்டி வந்ததால் பல வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களுக்கு காங்கிரஸில் சீட் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் இந்தத் தலைவர்கள் புலம்பினராம்.
ஒரு வேளை தனித்துப் போட்டியிட்டு, அப்போது தோல்வியடைந்திருந்தால், கோஷ்டிப் பூசல்தான் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று இந்தத் தலைவர்கள் சோனியாவடிம் சொல்லியிருப்பார்களோ!












Click it and Unblock the Notifications