திட்டக் கமிஷன் கூட்டம்-ஜெயலலிதா நாளை டெல்லி செல்கிறார்
சென்னை டெல்லியில் நாளை நடைபெறும் திட்டக் கமிஷன் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதா நாளை புறப்பட்டுச் செல்கிறார்.
3வது முறையாக முதல்வரானது முதல் படு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார் ஜெயலலிதா. அமைச்சர்கள், அதிகாரிகளை முடுக்கி விட்டு அவர்களது பணிகளைச் செய்ய உத்தரவிட்டு வரும் பல்வேறு திட்டங்களை எளிமையான முறையில் தொடங்கி வைத்து செயல்படுத்த ஆரம்பித்துள்ளார்.
தனது தொகுதியான ஸ்ரீரங்கத்திற்கும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட புகார் மனுக்களின் அடிப்படையில், குறைகளை தீர்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தார். அவரிடம், தமிழகத்திற்குத் தேவையான நிதி குறித்து கோரிக்கை வைத்து மனு கொடுத்தார்.
இந்த நிலையில் நாளை மத்திய திட்டக் கமிஷன் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜெயலலிதா டெல்லி செல்கிறார்.
வழக்கமாக இந்தக் கூட்டங்களுக்கு தமிழகத்திலிருந்து நிதியமைச்சர்கள்தான் அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை ஜெயலலிதாவே செல்கிறார்.
திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் தமிழகத்திற்குத் தேவையான நிதி குறித்து விளக்கி கூடுதல் நிதி ஒதுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைக்கவுள்ளார்.
முதல்வருடன் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் ஆகியோரும் டெல்லி செல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications