ராஜினாமா முடிவைக் கைவிடுமாறு பிரதமர் கோரியதை நிராகரித்தார் கோபால் சுப்ரமணியம்

கோபால் சுப்ரமணியத்தின் ராஜினாமா முடிவால் மத்திய அரசுக்குப் பெரும் நெருக்கடியும், பின்னடைவும் ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில், 2ஜி ஊழல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கோபால் சுப்ரமணியத்தின் இந்த முடிவால் அரசுக்கு பெரும் சரிவு ஏற்படும் என்று சட்ட வல்லுநர்கள் வட்டாரத்தில் கருதப்படுகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசின் சார்பில் கோபால் சுப்ரமணியம்தான் ஆஜராகி வருகிறார். இந்த நிலையில், ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு சலுகை காட்டியதாக மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கில் கோபால் சுப்பிரமணியம் ஆஜராவதை விரும்பாத சிபல், தனக்காக வாதாட ரோஹின்டன் நரிமன் என்ற தனியார் வக்கீலை ஏற்பாடு செய்தார்.
இதற்கு மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியும் ஒப்புதல் அளித்து நரிமனை வக்கீலாக ஆஜராக உத்தரவு பிறப்பித்தார்.
இதனால் அதிருப்தியுற்ற கோபால் சுப்ரமணியம் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.மேலும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலையும் நேரில் சந்தித்து தனது ராஜினாமா முடிவு குறித்து விவரித்தார். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 2ஜி வழக்கில் நான்தான் ஆஜராகி வருகிறேன். இந்த நிலையில் மத்திய அமைச்சர் கபில் சிபல் தனியார் வக்கீலை நாடியது எனது அலுவலகத்தை களங்கப்படுத்துவதாக நான் கருதினேன். ராஜினாமா செய்தேன்.
எனது நிலை குறித்து குடியரசுத் தலைவரிடம் விவரித்தேன். அரசு எனக்கு இந்த சொலிசிட்டர் ஜெனரல் பணியை வழங்கியதற்காக நன்றியும் தெரிவித்தேன் என்றார்.
குடியரசுத் தலைவர், பிரதமரின் கோரிக்கையை நிராகரித்தார்:
கோபால் சுப்ரமணியம் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடமே அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பொறுமை காக்குமாறும், ராஜினாமா முடிவைக் கைவிடுமாறும் குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார் என்று தெரிகிறது. ஆனால் தனது முடிவில் உறுதியுடன் இருப்பதாக கோபால் சுப்ரமணியம் குடியரசுத் தலைவரிடம் தெரிவித்துள்ளார்.
அதேபோல பிரதமர் மன்மோகன் சிங்கும், கோபால் சுப்ரமணியம் தனது முடிவை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதையும் கோபால் சுப்ரமணியம் நிராகரித்து விட்டார்.
மேலும் நேற்று முழுவதும் தனது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.
சமாதானப்படுத்த முனையும் மொய்லி:
இந்த நிலையில், கபில் சிபலுக்கு ஆதரவாக செயல்பட்டு மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி விட்ட சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, கோபால் சுப்ரமணியத்திடம் சமரசம் பேச முயற்சி மேற்கொண்டுள்ளார்.
பிரதமருடன் வீரப்ப மொய்லி சந்திப்பு:
பெங்களூரில் இருந்த மொய்லி இன்று டெல்லி விரைந்தார். உடனடியாக பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசினார். இதையடுத்து மொய்லி, கோபால் சுப்ரமணியத்தை சந்திப்பார் என்று தெரிகிறது.
கோபால் முடிவு சரிதான்-ஜே.எஸ்.வர்மா:
கோபால் சுப்ரமணியம் எடுத்த முடிவு மிகச் சரியானது என்று முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தன்னை கெளரவத்துடன் அரசு நடத்தவில்லை என்று கருதி, உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் கோபால் சுப்ரமணியம். அவர் எடுத்த முடிவு மிகச் சரியானது.
மேலும் கபில் சிபல் தொடர்பான கோப்புகளை அவருடைய அனுமதி கூட பெறாமல் அரசு எடுத்துச் சென்றது கோபால் சுப்பிரமணியத்தை அவமதிப்பது போலாகும். இதை உணர்ந்துதான் அவர் தனது பதவியை உதறியுள்ளார். இதைப் பாராட்டுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications