அதிமுக அரசின் பொய் வழக்குகளைக் கண்டித்து ஆகஸ்ட் 1ல் அறப்போராட்டம்- திமுக
சென்னை: அதிமுக அரசு தங்களது கட்சியினர் மீது போட்டு வரும் பொய் வழக்குகளை நிறுத்தக் கோரியும், அதைக் கண்டித்தும் ஆகஸ்ட் 1-ம் தேதி அறப் போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நில அபகரிப்பு, நில ஆக்கிரமிப்பு, வீடு அபகரிப்பு ஆகிய முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வழக்குகளில் பெரும்பாலும் திமுகவினரே சிக்குகின்றனர்.
நில மோசடி வழக்குளில் மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர்களான அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ், தளபதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.ஆர். கோபி தாய்லாந்துக்கு தப்பிவிட்டார்.
இது தவிர நில அபகரிப்பு புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதர் மீது நில அபகரிப்பு புகார் கூறப்பட்டுள்ளது. இது போன்ற வழக்குகளில் திமுகவினர் சிக்கி வருகின்றனர்.
திமுகவினர் மீது வேண்டும் என்றே, பழி வாங்கும் நோக்கில் பொய்யான வழக்குகளைத் தொடர்வதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. எனவே, இதற்கு காரணமான அதிமுக தலைமையிலான அரசை கண்டித்து வரும் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் அறப் போராட்டம் நடத்தப்போவதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications