நில மோசடி: 2 அதிமுகவினருக்கு கல்தா- ஜெயலலிதா அதிரடி

தமிழகத்தில் நில மோசடியில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், நில மோசடி வழக்குகளை விசாரிப்பதற்காகவே மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஏராளமானவர்கள் நில மோசடி வழக்கில் கைதாகி வருகின்றனர். இந்நிலையில் சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு புகாரில் சேலம் 24-வது வட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான சித்தானந்தம், சூரமங்கலம் பகுதி எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் கனகராஜ் ஆகியோர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இதில் சித்தானந்தம் தலைமறைவாகிவிட்டார், கனகராஜுவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ள இந்த இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல் பட்ட காரணத்தினாலும் சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 24-வது வட்ட அதிமுக செயலாளர் சித்தானந்தம், சூரமங்கலம் பகுதி எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் கனகராஜ் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் திடீர் என்று மாற்றப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டு்ள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ப. மோகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அய்யப்பா ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் அரசு தலைமைக் கொறடா மோகன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு கழக உடன் பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications