டான்சி வழக்கில் ஜெ.வை விடுத்த நீதிபதி தங்கராஜ் நடுநிலையோடு விசாரிப்பாரா?- திமுக
சென்னை: புதிய தலைமைச் செயலகக் கட்டுமானப் பணிகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராஜ் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது.
டான்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவை விடுவித்தவர் தான் நீதிபதி எஸ்.தங்கராஜ் என்றும், அவர் நடுநிலையுடன் இந்த தலைமைச் செயலக விவகாரத்தை விசாரிக்க மாட்டார் என்றும், ஜெயலலிதாவின் விருப்பப்படியே இந்தக் கமிஷனின் முடிவுகள் இருக்கும் என்றும் திமுக கூறியுள்ளது.
இவர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று அந்த வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஜெயலலிதாவுக்கு சாதகமாக நீதிபதி தங்கராஜ் பிறப்பித்திருந்த தீர்ப்பை, பதிவு ஆவணங்களில் இருந்து அழித்து உத்தரவிட்டது.
நீதிபதி தங்கராஜ் ஓய்வு பெற்ற பிறகு, ஜெயலலிதாவால் மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். எனவே இந்த வகையில் அவர்களுக்குள் நட்பு உண்டு.
எனவே நீதிபதி தங்கராஜ் தலைமையில் விசாரணை கமிஷனை நியமித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் அன்பழகன் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில்,
தமிழக அரசுக்கென்று புதிய தலைமைச் செயலகம் கட்டவேண்டுமென்பது நீண்டகால தேவையாக இருந்தது. ஜார்ஜ் கோட்டையில் அரசு அலுவலகங்களை நடத்துவதற்கு இடநெருக்கடி இருந்ததால், வசதியான புதிய கட்டிடம் தேவைப்பட்டது.
2001-06ம் ஆண்டில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா, சட்டசபையில் இதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். எனவே சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள நூற்றாண்டுக்கும் மேலாக செயல்படும் ராணிமேரி கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு, அங்கு புதிய தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு முடிவு செய்தார்.
ஆனால் அதற்கு மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே அங்கு அந்த கட்டிடத்தை கட்டுவதை ஜெயலலிதா கைவிட்டார். அதன் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் அதைக் கட்ட முடிவு செய்தார். அதற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். ஆனால் அதற்கு மத்திய அரசு கேட்ட அம்சங்களை அவரது அரசு பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதால், அந்த முயற்சியும் வீணாய்ப் போனது.
அவர் தான் நினைத்த இடங்களில் புதிய தலைமைச் செயலகக் கட்ட முடியவில்லை என்பதற்கு தி.மு.கதான் காரணம் என்று நினைத்து அந்த கட்சி மீது குரோதம் கொண்டார்.
இந்த நிலையில் 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. இந்த அரசும் புதிய தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு முடிவு செய்து, அதை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டியது. இதற்கு அமைச்சரவை மற்றும் சட்டசபையில் முடிவு செய்யப்பட்டது.
இந்த கட்டிடம் பிரதமர் முன்னிலையில் 13.3.10 அன்று திறந்து வைக்கப்பட்டது. தலைமைச் செயலகம், சட்டசபை ஆகியவை அங்கு செயல்படத் தொடங்கின. இந்த நிலையில் தேர்தல் வந்தது. தான் வெற்றி பெற்று முதல்வரானால், புதிய தலைமை செயலகத்தை பயன்படுத்தமாட்டேன் என்று தேர்தலுக்கு முன்பதாகவே ஜெயலலிதா கூறியிருந்தார்.
திமுக மீது இருந்த வெறுப்பினால் அப்படி செயல்பட்டார். தேர்தலில் வெற்றி பெற்றதும் பழைய ஜார்ஜ் கோட்டைக்கே அனைத்து அலுவலகத்தையும் மாற்றும்படி உத்தரவிட்டார். இதை எதிர்த்து வேறொருவர் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
தனது இந்த முடிவை நியாயப்படுத்துவதற்காக பல்வேறு தவறான குற்றச்சாட்டுகளை திமுக அரசு மீது கூறி வருகிறார். இந்த கட்டிடம் கட்டியது பற்றி 3 மாதங்களுக்குள் முழு விசாரணை நடத்துவதற்காக ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.தங்கராஜ் தலைமையில் விசாரணை கமிஷனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியில், பழிவாங்கும் நோக்கத்தில் இந்த கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்துவதை தவிர்க்கும் நோக்கத்திலும் இந்த கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த கட்டுமானம் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு எந்த வித ஆதாரமும் இல்லை. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்காக கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முன்னாள் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுவிட்டன.
டான்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஜெயலலிதா, தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனுவை தனிக்கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை, தற்போது கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி எஸ்.தங்கராஜ் தான் விசாரித்தார்.
இவர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று அந்த வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஜெயலலிதாவுக்கு சாதகமாக நீதிபதி தங்கராஜ் பிறப்பித்திருந்த தீர்ப்பை, பதிவு ஆவணங்களில் இருந்து அழித்து உத்தரவிட்டது.
நீதிபதி தங்கராஜ் ஓய்வு பெற்ற பிறகு, ஜெயலலிதாவால் மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். எனவே இந்த வகையில் அவர்களுக்குள் நட்பு உண்டு.
எனவே நீதிபதி தங்கராஜ் தலைமையில் விசாரணை கமிஷனை நியமித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. அதை விசாரணைக்கு ஏற்கக்கூடாது. எப்போதெல்லாம் திமுக தோல்வி அடைகிறதோ, அப்போதெல்லாம் கோர்ட்டுகளில் மனு தாக்கல் செய்வதுதான் க.அன்பழகனின் வழக்கம் என்றார்.
அன்பழகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன், அன்பழகன் மனு தாக்கல் செய்ததால்தான் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு பெங்களூர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. எனவே மனுதாரரை பற்றி பேசக்கூடாது என்றார்.
நவநீதகிருஷ்ணன் கூறுகையில், இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது பற்றி முதலில் விசாரிக்க வேண்டும் என்றார்.
அது குறித்த வாதத்துக்கு இப்போதே தயாராக இருப்பதாக அன்பழகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன் கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது பற்றிய விசாரணையை ஆகஸ்டு மாதம் 4ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications