2.20 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார்

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் மீனாம்பாள் (64). இவர் மதுரை மாவட்ட எஸ்.பி. ஆஸ்ரா கார்க்கிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அதில்,
எனக்கு மதுரை மாவட்டம் வாவிடைமருதூரில் 2 ஏக்கர் 20 சென்ட் நிலம் உள்ளது. இதை சின்னம்மாள் என்பவர் கவனித்து வருகிறார்.
இதை விற்பதற்காக வில்லங்க சான்றிதழ் மற்றும் பத்திரங்களை புரோக்கர்களிடம் கொடுத்தேன். அவர்கள் இந்த இடம் குறித்து வில்லங்கம் போட்டு பார்த்தனர்.
அப்போது, எனது நிலத்தை வாவிடமருதூரைச் சேர்ந்த ஹரிஹரன் பவர் ஏஜென்ட்டாக இருந்து, மதுரை கிருஷ்ணாபுரம் காலனி கண்ணன் மற்றும் திருமங்கலம் ஜெயச்சந்திரனுக்கு தலா 45 சென்ட் விற்றுள்ளது தெரிய வந்தது.
இந்த நிலத்தை அபகரிக்கும் வகையில், சோழவந்தான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கருப்பையா, சின்னம்மாள், ஹரிஹரன், கண்ணன், ஜெயச்சந்திரன், தலையாரிகள் சடாச்சரம், தமிழன் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்து பவர்பத்திரம் தயார் செய்து செயல்பட்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு மீது உரிய விசாரணை நடத்த மதுரை எஸ்.பி. உத்தரவிட்டார்.
புதிய அதிமுக அரசு பதவியேற்றது முதல் திமுகவினர் மீது தான் நில மோசடி புகார் எழுந்து வந்தது. ஆனால், தற்போது அதிமுகவினர் மீதும் இந்த நில அபகரிப்புப் புகார்கள் புற்றீசல் போலக் கிளம்பியுள்ளது. நேற்று முன்தினம்தான் தமிழக வ்ணிகவரித்துறை அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி மீது நில மோசடி புகார் எழுந்தது.
இந்த நிலையில் சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மீதும் புகார் கிளம்பியுள்ளதால் ஆளுங்கட்சி வட்டாரம் சங்கடத்தில் தவிக்கிறது.












Click it and Unblock the Notifications