மு.க.அழகிரியின் கூட்டாளி கோ. தளபதியின் தம்பி திடீர் மரணம்
சென்னை: நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கூட்டாளி கோ. தளபதியின் தம்பி திடீரென மரணமடைந்துள்ளார்.
மதுரை மாவட்ட திமுக செயலாளர் கோ.தளபதி. அழகிரியின் முக்கிய தளபதி, வலது கை போல செயல்பட்டு வந்தவர். நில அபகரிப்பு உள்ளிட்ட புகார்களில் சிக்கி கடந்த 19ம் தேதி இவர் கைது செய்யப்பட்டார். இவருடன் பொட்டு சுரேஷ் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு அனைவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தளபதியின் தம்பி கோ.பிரபு என்பவர் திடீரென சென்னையில் மரணமடைந்துள்ளார். அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அண்ணன் கைதானதைக் கேட்டு பெரும் வருத்தத்தில் இருந்து வந்தாராம் பிரபு. இந்த நிலையில் நேற்று அவர் திடீரென மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு வைத்து நேற்று இரவு பிரபு மரணமடைந்தார்.
இதனால் தளபதி தரப்பு பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. தம்பிக்கு இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கக் கோரி தளபதி சார்பில் இன்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
எஸ்.ஆர். கோபி டிரைவர் கைது:
நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருக்கும் மதுரை திமுக நிர்வாகி எஸ். ஆர். கோபியின் டிரவைர் ஊதல் பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
நில மோசடி வழக்கில் மதுரையில் திமுக நிர்வாகிகள் அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ், தளபதி ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் உள்ளனர். இதில் எஸ். ஆர். கோபி மட்டும் தலைமறைவாக உள்ளார்.
போலீசார் அவரை வலை வீசித் தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு எஸ். ஆர். கோபியின் டிரைவர் ஊதல் பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் எஸ். ஆர். கோபி இருப்பிடம் பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications