அடுத்த முதல்வர் குறித்து எதியூரப்பாவிடம் ஆலோசனை நடத்திய பிறகே முடிவெடுப்போம்- ராஜ்நாத் சிங்
டெல்லி: அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கு முன்பு எதியூரப்பாவிடமும் ஆலோசனை நடத்திய பிறகே முடிவெடுப்போம் என்று மூத்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
பதவி விலகுவதாக எதியூரப்பா கூறி விட்டார். ஆனால் உடனடியாக விலக முடியாது என்று தெரிவித்துள்ள அவர் ஜூலை 31ம் தேதி வரை தான் பதவியில் நீடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், புதிய முதல்வரைத் தேர்வு செய்யும் பணியில் பாஜக தீவிரமாகியுள்ளது. இதற்காக ராஜ்நாத் சிங்கும், அருண் ஜேட்லியும் பெங்களூர் வந்துள்ளனர்.
பெங்களூர் வந்து சேர்ந்து விட்ட பின்னரும் கூட அவர்களால் அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய இயலாத நிலை உள்ளது. காரணம், எம்.எல்.ஏக்கள் மத்தியில் தற்போது எதியூரப்பாவுக்கு ஆதரவாக சிலர் கிளம்பியுள்ளதே என்கிறார்கள்.
மேலும், எதியூரப்பாவும் ஏகப்பட்ட நிபந்தனைகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார். முதலில் சதானந்த கெளடாவை முதல்வராக்க வேண்டும் என்றார். தற்போது அவரை ஆக்க முடியாவிட்டால் அமைச்சர் ஷோபாவை முதல்வராக்குங்கள் என்று கூறுகிறாராம்.
இதனால் பாஜக தலைமை குழப்பமடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று பிற்கல் 2 மணியளவில் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடப்பதாக இருந்தது. அது தற்போது நடக்கவில்லை, தள்ளிப் போயுள்ளது.
இந்த நிலையில், ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார். எதியூரப்பா மூத்த தலைவர். எனவே அவருடனும் கலந்து பேசுவோம். மேலும் முதல்வர் தேர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அவரும் நிச்சயம் பங்கேற்பார் என்றார்.












Click it and Unblock the Notifications