நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது- ராஜ்யசபாவில் அமளி- ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதலில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்து லோக்சபா சபாநாயகர் மீரா குமார் படித்தார். அதன் பின்னர் உறுப்பினர்கள் எழுந்து இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து நாளை வரை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபாவில் அமளி
அதேபோல ராஜ்யசபாவும் இன்றுகாலை கூடியது. அப்போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு 2ஜி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பாஜக நோட்டீஸ் கொடுத்தது. மேலும் 2ஜி விவகாரத்தை உடனடியாக விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அது கோரியதால் அமளி ஏற்பட்டது.
பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் அமளி தொடரவே பிற்பகல் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
ஸ்பெக்ட்ரம் விவகாரம்
மழைக்காலக் கூட்டத் தொடரில் பெரும் புயலைக் கிளப்ப பல்வேறு பிரச்சினைகளை கையில் எடுத்துக் கொண்டு தயாராக உள்ளன எதிர்க்கட்சிகள்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்குத் தெரியாமல் எதுவும் நடக்கவில்லை என்று ராசா கூறியுள்ள குற்றச்சாட்டைப் பெரிதுபடுத்தி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்க பாஜக தயாராக இருக்கிறது. இதுதவிர ஊழல் புகார்கள், கருப்புப் பண விவகாரம், விலைவாசி உயர்வு ஆகியவற்றையும் அது எழுப்பவுள்ளது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை
மேலும், தமிழக மீ்னவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வரும் விவகாரத்தையும் இந்த முறை பெரிதாக எழுப்ப அது தயாராகி வருகிறது. இந்தப் பிரச்சினை எழுப்பப்படும்போது பாஜகவுடன் இடதுசாரிகள், அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இணைந்து கொள்ளும் என்று தெரிகிறது. மேலும் இலங்கையின் கொலைக்கள வீடியோ காட்சிகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்பால்
லோக்பால் மசோதாவில் பிரதமர் பதவிக்கும், நீதித்துறைக்கும் விலக்கு அளிக்கும் முடிவும் நாடாளுமன்றத்தில் சர்ச்சையைக் கிளப்பும் என்று தெரிகிறது. இடதுசாரிகள் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாஜகவைப் பொறுத்தவரை இதை அக்கட்சியும் எழுப்பும் என்றே தெரிகிறது.
லோக்பால் மசோதாவை நாளை மறு நாள் அறிமுகப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதால், அது எந்த மாதிரியான எதிர்ப்பலைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பும் என்பது எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.
இவை தவிர மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம், நக்சலைட் பிரச்சினை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பிரச்சினை உள்ளிட்டவற்றையும் கையில் எடுத்துக் காத்திருக்கின்றன எதிர்க்கட்சிகள்.












Click it and Unblock the Notifications