காங்.கும், கூட்டணிக் கட்சிகளும் காணாமல் போய் விடும்- உ.தனியரசு
திருப்பூர்: தமிழ் இனத்தை அழித்த இலங்கைக்கு இனியும் உதவினால் லோக்சபா தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் காணாமல் போய்விடும் என்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு பேசினார்.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் திருப்பூர் வடக்கு மாநகர செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் திருப்பூரில் நடந்தது. இதில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான உ.தனியரசு பேசியதாவது:
கொங்கு மண்டல மக்களிடையே சரியான கருத்தொற்றுமை ஏற்படுவதை, சில கட்சிகள் விரும்பவில்லை. மக்கள் அமைப்புகளை உருவாக்கும் முயற்சிக்கு, கடந்த தி.மு.க., அரசு பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் தான் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கொங்கு இளைஞர் பேரவைக்கு, தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தான் சட்டசபையில் தனி அங்கீகாரம் கிடைத்துள்ளது. தமிழ் இனத்தையே அழித்த இலங்கை அரசிற்கு காங்கிரஸ் கட்சி உதவியதால் தான் கடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு தமிழக மக்கள் சரியான பாடம் கற்பித்தனர்.
தமிழக மக்கள் பாடம் கற்பித்த பிறகும் கூட, காங்கிரஸ் அரசு இலங்கைக்கு தொடர்ந்து உதவுவது கண்டிக்கத்தக்கது. இந்த நிலை நீடித்தால், லோக்சபா தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் காணாமல் போய்விடும். இவ்வாறு உ.தனியரசு பேசினார்.












Click it and Unblock the Notifications