பங்கு சந்தை வீழ்ச்சி எதிரொலி: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.744 உயர்வு!

தங்கம் விலை நாளுக்கு நாள் விண்ணை நோக்கி ராக்கெட் வேகத்தில் பறக்கிறது. கடந்த 1920-ம் ஆண்டு ஒரு சவரன் தங்கத்தின் விலை வெறும் 21 ரூபாய்!
அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தங்கம் விலையில் குறைவே இல்லை. தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
2008-ம் ஆண்டிற்கு பிறகுதான் தங்கத்தின் மீது அனைவரின் பார்வையும் ஒட்டுமொத்தமாக திரும்பியது என்று சொல்லும் அளவிற்கு தங்கம் விலை வேகமாக உயரத்தொடங்கியது.
2009-ம் ஆண்டு முதல் முறையாக ஒரு பவுன் ரூ.10 ஆயிரத்தை கடந்தது. அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆயிரத்து 332 ரூபாய்க்கு விற்பனையானது. 2010-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் 12 ஆயிரத்து 784-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி பவுன் தங்கம் 16 ஆயிரம் ரூபாயை கடந்தது.
ரூ.18 ஆயிரம்
இந்த நிலையில், கடந்த மே மாதம் 28-ந் தேதி அன்று முதல் முறையாக 17 ஆயிரம் ரூபாயை கடந்து, பவுனுக்கு ரூ.17,008-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 3-ந் தேதி அன்று ரூ.18 ஆயிரத்தை கடந்து 18 ஆயிரத்து 112 ரூபாய்க்கு விற்றது.
ரூ.19 ஆயிரத்தை கடந்தது
இந்த நிலையில், தங்கம் விலை நேற்று 19 ஆயிரம் ரூபாயை கடந்து, 19 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு வரலாறு காணாத உயர்வு ஆகும். நேற்று ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.744 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் இந்த வரலாறு காணாத விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பங்கு சந்தை வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவையே முக்கிய காரணம் என்று வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். ஆபரணத்துக்காக தங்கம் என்றில்லாமல் சிறந்த சேமிப்பு என்று பலரும் தங்கத்தை கருத தொடங்கியதால் தங்கம் விற்பனை படுவேகமாக சூடுபிடித்துள்ளது.
நிலத்தில் பணத்தை கொட்டி முதலீடு செய்பவர்கள் கூட இப்போது நாளுக்கு நாள் விலையேறும் தங்கத்தின் மீது பணத்தை கொட்ட தொடங்கியிருக்கிறார்கள்.
இனி வரக்கூடிய மாதங்கள் திருமணம் மற்றும் விழாக்காலங்கள் என்பதால் விழாக்களுக்காக தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரிக்க தொடங்கியிருப்பதாலும் அதிகப்படியான தங்கத்தை இறக்குமதி செய்யவேண்டிய நிலை உள்ளது. எனவே தங்கம் விலையில் ஏற்றம் இருக்குமே தவிர இறக்கம் இருக்க வாய்ப்பில்லை, என்கிறார்கள் வர்த்தகர்கள்.
தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்ததன் விளைவு, நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் சற்றே குறைய ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications