மதுரையில் மனைவியைக் குத்திக்கொன்று, பிள்ளைளுக்கு விஷம் கொடுத்து கணவர் தற்கொலை
மதுரை: குடும்பத்தில் ஏற்பட்ட தகராறால், மனைவியைக் குத்திக் கொன்ற கணவர் தனது இரு மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இரு மகள்களும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி அமுதா. இந்தத் தம்பதிகளுக்கு மாரீஸ்வரி, சுவாதி என 12 மற்றும் 7 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.
கணபதி சரியாக வேலைக்குப் போவதில்லை. குடும்பத்தையும் காப்பாற்றுவதிலிருந்து தவறி வந்தார். இதனால் குடும்பத்தைக் கவனிக்க அமுதா ஒரு அப்பளக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார்.
வீட்டில் சோம்பேறியாக இருந்த கணபதிக்கு குடும்பத்தைக் காக்க வேலைக்குப் போய் வந்த மனைவி மீது சந்தேகம் வந்தது.இதனால் அடிக்கடி அவருடன் சண்டை போட்டு வந்தார்.
நேற்றும் இதுபோல சண்டை மூண்டது. அப்போது கடும் கோபமடைந்த கணபதி, கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தினார். இதில் அமுதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து தனது இரு மகள்களுக்கும் வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றி தானும் குடித்தார்.
வீட்டில் நடந்த சண்டையைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அமுதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மயங்கிக் கிடந்த கணபதி, இரு மகள்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கணபதி உயிரிழந்தார்.
இரு குழந்தைகளும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஜெய்ஹிந்துபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications