3 மாகாணங்களில் பஸ் பயணம் மேற்கொள்கிறார் ஒபாமா- வேலைவாய்ப்பு, பொருளாதாரம் குறித்து ஆய்வு

இது பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளில் ஒன்று ஒபாமா கூறியபோதிலும், அடுத்த அதிபர் தேர்தலில் தனது நிலையை ஸ்திரமாக்கிக் கொள்ள ஒபாமா அடிக்கும் ஸ்டண்ட் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்களிடையே தனது நெருக்கத்தை அதிகரித்துக் கொள்ளவே இந்த பஸ் பயணத்தை ஒபாமா மேற்கொள்ளவுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஒபாமாவின் பஸ் பயணம் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை விடுத்த செய்திக்குறிப்பில், பொருளாதாரத்தை வளர்ப்பது, நடுத்தர வர்க்கத்தினரை பலப்படுத்துவது, வேலைவாய்ப்பு சூழலை அதிகரிப்பது குறித்து அமெரிக்கர்களின் கருத்துக்களை நேரடியாக கேட்டறியும் முகமாக இந்த பயணத்தை அதிபர் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த பயணத்தின்போது உள்ளூர் மக்களைசந்திப்பதோடு வர்த்தகக் குழுவினரையும் அவர் சந்தித்து உரையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை இந்த பஸ் பயணம் நடைபெறும். முதலில் தெற்கில் உள்ள மின்னசோட்டாவில் பயணிப்பார் ஒபாமா. அடுத்து வட கிழக்கில் உள்ள அயோவா மாகாணத்திலும், பின்னர் இல்லினாய்ஸ் மாகாணத்திலும் அவரது பஸ் பயணம் தொடரும்.
2008ல் நடந்த அதிபர் தேர்தலில் இந்த மாகாணங்களில் அதிக வாக்குகளை ஒபாமா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒபாமாவின் பயணம் குறித்து வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பில் மேலும் கூறுகையில், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நன்கு அறிந்து வைத்துள்ளார் அதிபர். மக்களிடையே எதிர்கால நம்பிக்கையை ஊக்குவிக்கவும் அவர் விரும்புகிறார். மேலும் வருங்கால சந்ததியினரிடையே நம்பிக்கையை அதிகரிக்கவும் அவர் விரும்புகிறார் என்று கூறப்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications
