உ.பி. முதல்வர் மாயாவதியின் பங்களாவை புதுப்பிக்க ஒரு ஆண்டில் ரூ. 20 கோடி செலவு!
லக்னோ: உ.பி. முதல்வர் மாயாவதியின் பங்களாவை புதுவண்ணம் பூசி, புதுப்பித்து, பல்வேறு மராமத்துப் பணிகளைச் செய்ய கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 20 கோடியே 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை செலவிட்டுள்ளனர். அத்தனையும் மக்களின் வரிப்பணம். ஒரு பைசாவைக் கூட தனது பாக்கெட்டிலிருந்து மாயாவதி தரவில்லையாம்.
லக்னோ மால் அவென்யூ பகுதியில் உள்ள 13ம் எண் பங்களாதான் மாயாவதியின் சொந்த வீடு. சமீபத்தில் முதல்வருக்கான அதிகாரப்பூர்வ பங்களாவிலிருந்து இங்கு இடம் பெயர்ந்தார் மாயாவதி. 13ம் எண் தனக்கு ராசி என்பதால் 13ம் எண் கொண்ட இந்த வீட்டுக்கு குடி பெயர்ந்துள்ளார் மாயாவதி.
இந்த நிலையில் இந்த பங்களாவை மராமத்து செய்ய கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அரசுப் பணத்திலிருந்து ரூ. 20.12 கோடியை செலவிட்டுள்ளாராம் மாயாவதி.
முதலமைச்சரின் பொது நிதியிலிருந்து பணத்தை எடுத்து வாரியிறைத்துள்ளனர். இந்த செலவுக் கணக்கு, துணை பட்ஜெட்டிலேயே அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2002ம் ஆண்டிலிருந்து வீட்டில் பல்வேறு பராமரிப்பு, மராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ. 51 கோடி வரை செலவிட்டுள்ளனர்.
2002ம் ஆண்டு வீட்டைப் புதுப்பிக்க ரூ. 19.53 கோடி செலவிடப்பட்டது. பின்னர் 2007ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மேலும் ரூ. 10.19 கோடியை ஒதுக்கி வீட்டை சரி செய்தார் மாயாவதி. பின்னர் கூடுதலாக ரூ. 22 கோடியும், ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளது.
மாயாவதியின் இந்த பங்களா கிட்டத்தட்ட 2 லட்சம் சதுர அடிப் பரப்பளவில் அமைந்துள்ள பிரமாண்டமான வீடாகும். நகரத்தின் நடுப் பகுதியில் உள்ளது.
18 அடி உயர பிரமாண்ட சுற்றுச் சுவருடன் கூடிய இந்த வீட்டுக்குள் ஏகப்பட்ட அதி நவீன வசதிகளைச் செய்துள்ளனராம். இந்த பங்களா வளாகத்திற்குள் தனது 18 அடி உயர சிலையையும் நிறுவியுள்ளார் மாயாவதி. அதேபோல கான்ஷிராமின் சிலையும் உள்ளே உள்ளது.
வீடு முழுவதும் குளிரூட்டப்பட்டுள்ளது. புகழ் பெற்ற தோல்பூர் டைல்ஸ் போட்டு வீட்டின் தரைகளை அழகுபடுத்தியுள்ளனர். சமீபத்தில் வீட்டு வளாகத்தில் மிகவும் அழகிய பார்க்கிங் பகுதியும் உருவாக்கப்பட்டது.
இந்த கோட்டை வீட்டுக்குள் அவ்வளவு சீக்கிரம் யாரும் நுழைந்து விட முடியாது. வீட்டை வேடிக்கை பார்க்கக் கூட யாரையும் அனுமதிப்பதில்லை இங்கு பாதுகாப்புக்கு நிற்கும் போலீஸார்.












Click it and Unblock the Notifications