பிரச்சினைகளை சந்திப்பதை விட தப்பி ஓடவே நினைக்கிறது அரசு- அன்னா கைதுக்கு அத்வானி சாடல்
டெல்லி: பிரச்சினைகளை சந்திப்பதை விட அதிலிருந்து தப்பி ஓடவும், மற்றவர்களை பலிகடாவாக்கவுமே மத்திய அரசு முனைகிறது. இதையே அன்னா ஹஸாரே கைது காட்டுகிறது. இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
அன்னா கைது குறித்து அத்வானி கருத்து தெரிவிக்கையில், இது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. இதை எதிர்பார்த்ததுதான். இப்படித்தான் அரசு செயல்பட்டு வருகிறது.
பிரச்சினைகளை சந்தித்து தீர்ப்பதற்குப் பதில் தப்பி ஓட அது முனைக்கிறது. ஊழலை ஒழிக்க திராணியில்லாமல், அதற்கு எதிராக அமைதி வழியில் போராட முனைவோரை ஒடுக்க முயலுகிறது.
அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறது. பொறுப்பின்றி நடந்து வருகிறது. லோக்பால் மசோதாவை விடுங்கள், ஒரு அமைதியான போராட்டத்தை தடுக்க அரசு நினைப்பது ஏன், துடிப்பது ஏன்?
அன்னா ஹஸாரே மீது காங்கிரஸ் கட்சி அடுக்கியுள்ள ஊழல் புகார்கள் குறித்து உண்மை தெரியாமல் நான் எதுவும் கூற முடியாது. ஆனால் அன்னாவே இதற்கு ஏற்கனவே விளக்கமளித்துள்ளார்.
அன்னா ஹஸாரே விவகாரத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்சினையாக்குவோம் என்றார் அத்வானி.
எமர்ஜென்சியை விட மோசம்-நக்வி:
அன்னா ஹஸாரே கைது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், தற்போதைய நிலைமை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அரசின் பிடிவாதத்தையும், அரக்க குணத்தையுமே இந்த கைது நடவடிக்கை காட்டுகிறது.
இப்படி அரசு தொடர்ந்து செயல்பட்டு வந்தால் ஊழலுக்கு எதிரான இயக்கம் மேலும் வலுவடையும். நாங்கள் அன்னா ஹஸாரேவுடன் மட்டுமல்ல, ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவருக்கும் ஆதரவாக இருப்போம்.
அரசுக்கு பயம் வந்து விட்டது. இதனால்தான் பயத்தில் இப்படி நடக்க ஆரம்பித்துள்ளது. எமர்ஜென்சி காலத்தை விட இப்போது நிலைமை மோசமாக உள்ளது. மூ்த்த பாஜக தலைவர்கள் இதுகுறித்து விவாதித்துள்ளனர். இன்னும் சில மணி நேரங்களில் இதுகுறித்து பாஜகவும் நடவடிக்கையில் இறங்கும்.
நாடாளுமன்றத்தில் அன்னா ஹஸாரே விவகாரத்தை நாங்கள் எழுப்புவோம். ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வருவோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications