ஜெகன் மோகன் நிறுவனங்களில் சிபிஐ ரெய்ட்-பெட்டி பெட்டியாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்
ஆந்திராவில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின்னர் தனக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என துடித்தார் ஜெகன்மோகன் ரெட்டி. ஆனால் காங்கிரஸ் மேலிடமோ ரோசய்யாவை முதல்வராக்கியது. இதனால் வெகுண்ட ஜெகன் மோகன் ரெட்டி தொடர்ந்து காங்கிரஸுக்கும், ரோசய்யாவுக்கும் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில் ரோசய்யாவை நீக்கி விட்டு கிரண் குமார் ரெட்டியை முதல்வராக்கியது காங்கிரஸ் மேலிடம். இதனால் மேலும் கடுப்பானார் ஜெகன்மோகன் ரெட்டி. சோனியா காந்தியையும், பிரதமர் மன்மோகன்சிங்கையும் அவரது சாக்ஷி டிவி கடுமையாக விமர்சித்து செய்தி வெளிட்டது. இதையடுத்து காங்கிரஸ் மேலிடம் ஜெகன் மோகன் மீது பாய்ந்தது.
இதைத் தொடர்ந்து புதுக் கட்சி ஆரம்பித்தார் ஜெகன் மோகன். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற அவரது கட்சி வேகமாக வளர ஆரம்பித்தது. இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்துக்கள் குறித்து பல்வேறு கட்சிகளும் கேள்வி எழுப்பின. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், ஜவுளித்துறை அமைச்சருமான சங்கர் ராவ், ஜெகன் மோகன் மீ்து பரபரப்புக் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.
மேலும் ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றுகோரி ஆந்திர உயர்நீதிமன்றத்திலும் ராவ் வழக்கு தொடர்ந்தார். அதில், வெறும் ரூ. 11 லட்சமாக மட்டுமே இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் வருமானம் இன்று ரூ. 43,000 கோடியாக உயர்ந்துள்ளது. எனவே இந்த சொத்துக்கள் எப்படி வந்தன என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று ராவ் கூறியிருந்தார்.
இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று ரெய்டு நடத்த அனுமதி அளித்தது.
ஜெகனுக்குச் சொந்தமான அனைத்து சொத்துக்கள், நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் அதிகாரிகள் குழு ரெய்டு நடத்தி வருகிறது. சாக்ஷி டிவி அலுவலகத்திலும் ரெய்டு நடந்துத வருகிறது. அதேபோல ஐஏஎஸ் அதிகாரியான பி.பி. ஆச்சார்யாவின் வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது.
ரெய்டின்போது கைப்பற்றப்பட்ட ஏராளமான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பெரிய பெரிய பெட்டிகளில் வைத்து அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
மிகக்குறுகிய காலத்திலேயே இந்தியாவின் மிகப் பெரிய பெரும் பணக்காரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. கடந்த ஏப்ரல் மாதம் தனது சொத்து மதிப்பு ரூ. 365 கோடி என தெரிவித்திருந்தார் ஜெகன் மோகன் ரெட்டி என்பது நினைவிருக்கலாம்













Click it and Unblock the Notifications