பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதல்
மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதிக் கொண்ட சம்பவத்தால் மக்கள் முகம் சுளித்தனர்.
கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் மொத்தம் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 3 இடங்கள் கிடைத்தன. இதில் குளச்சல் பிரின்ஸ், கிள்ளியூர் ஜான்ஜேக்கப் ஆகியோர் ஒரு கோஷ்டியாகவும், விளவங்கோடு விஜயதரணி தனி கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
விஜயதரணி வெற்றி வாய்ப்பை தடுக்க காங்கிரசில் ஒரு கோஷ்டி கடுமையாக முயற்சித்தும், இந்த தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வீசிய காங்கிரஸ் அலை இவரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது. எனினும் இவரை ஓரம் கட்டும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மார்த்தாண்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் 3 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். அதில் பேசிய விஜயதரணி, நான் வெற்றி பெற்ற பிறகுதான் விளவங்கோடு தொகுதி பற்றி வெளி மக்களுக்கு தெரிகிறது என்றார். இதற்கு மேடையில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து மைக்கை பிடுங்கி கலாட்டா செய்தனர். மேடையும் விட்டும் இறங்கிச் சென்றனர்.
உடனே விஜயதரணி பேச்சை நிறுத்திவிட்டு அந்த இடத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார். பின்னர் வெளியேறியவர்கள் மீண்டும் திரும்பி வந்து பொதுக் கூட்டத்தை நடத்தினர்.
பின்னர் பேசிய எம்.எல்.ஏ.க்கள் ஜான் ஜேக்கப், பிரின்ஸ் ஆகியோர் நேசமணி, பொன்னப்ப நாடார், சுந்தரதாஸ் போன்றவர்கள் வெற்றி பெற்ற தொகுதியை பற்றி நான் வெற்றி பெற்ற பிறகுதான் விளவங்கோடு தொகுதி பற்றி வெளி மக்களுக்கு தெரிகிறது என்று விஜயதரணி பேசுவதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றனர். இதனால் பொதுக் கூட்டம் நடைபெற்ற இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications