கருணாநிதி- ஸ்டாலின் மீது கோபம்: சமச்சீர் கல்வி வெற்றி விழா கூட்டங்களை நடத்தாத அழகிரி

தேர்தல் தோல்விக்குப் பின் திமுகவில் அழகிரி-ஸ்டாலின் கோஷ்டி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
இந் நிலையில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை அமல்படுத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அதை மாவட்டந்தோறும் ஆகஸ்ட் 19ம் தேதி வெற்றி விழாவாகக் கொண்டாட திமுக தலைமை உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்றார். அதே போல பிற மாவட்டங்களிலும் இந்தக் கூட்டங்கள் நடந்தன.
ஆனால், திமுக தென்மண்டல ஒருங்கிணைப்பாளரான அழகிரியின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மாநகர், மதுரை புறநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் இந்தக் கூட்டங்கள் நடக்கவில்லை.
அதே போல தஞ்சாவூர் மாவட்டத்திலும் இக் கூட்டம் நடக்கவில்லை. அங்கு அழகிரி ஆதரவாளரான திருச்சி சிவா எம்பி., பங்கேற்காததால் கூட்டம் நடக்கவில்லை. இதையடுத்து நேற்று ஸ்டாலினே நேரில் பங்கேற்று கூட்டத்தை நடத்தி முடித்தார்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின் கைது செய்யப்பட்ட திமுகவினரின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசும்போது ஸ்டாலினும், அறிக்கைகள் விடும்போது கருணாநிதியும்
அழகிரியின் ஆதரவாளர்கள் பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி உள்ளிட்டோரின் பெயர்களை தவிர்த்து வருகின்றனர். இதனால் அழகிரி கடுப்பில் உள்ளதாக தகவல்கள் வந்தன.
இந் நிலையில் சமச்சீர் கல்வி வெற்றி விழாக் கூட்டங்களை அழகிரி நடத்தாமல் தவிர்த்துள்ளார் என்கிறார்கள்.
புழல் சிறையில் தி.மு.க. கவுன்சிலருடன் ஸ்டாலின் சந்திப்பு:
சென்னையை அடுத்த பெருங்குடி பேரூராட்சி கவுன்சிலராக உள்ள ரவிச்சந்திரன் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். வேளச்சேரியைச் சேர்ந்த பெண் டாக்டர் உள்ளிட்ட சிலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பல கோடி மதிப்புள்ள இடத்தை அபகரித்ததாக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார். அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று ஜெயிலில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், ரவிச்சந்திரன் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லை. வேண்டுமென்றே அவர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். இந்த வழக்கை முறைப்படி நீதிமன்றத்தில் சந்திப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications