அப்பாடா... ரூ.20,000த்தை விட்டு இறங்கி வந்தது தங்கம்!

இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1080 குறைந்ததில், பகட்டுக்கும் முதலீட்டுக்காகவும் இல்லாமல், திருமண அவசியத்துக்காக நகை வாங்கக் காத்திருந்த பெற்றோர் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த வாரம் சவரனுக்கு 21 ஆயிரம் ரூபாயைத் தாண்டி அதிர வைத்தது. அடுத்தடுத்த விழாக்கள் வருவதால் தங்கம் விலை ரூ.25 ஆயிரம் வரை கூட வரலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.
நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 குறைந்தது. செவ்வாய்க்கிழமை ரூ.21 ஆயிரத்து 40க்கு விற்பனையான ஒரு பவுன் தங்கத்தின் விலை நேற்று ரூ.20,792 ஆக இருந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 599க்கு விற்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) தங்கம் விலை மூன்றாவது நாளாக கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
இன்று ஏற்பட்ட சரிவு தங்கம் மார்க்கெட்டில் இதுவரை காணாத ஒன்று என்கிறார்கள் வியாபாரிகள். சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,464 ஆக இருந்தது. அதாவது கிராமுக்கு நேற்றை விட இன்று 135 ரூபாய் குறைந்தது. இதன் காரணமாக பவுனுக்கு ரூ.1,080 குறைந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.19 ஆயிரத்து 712 ஆக உள்ளது.
தங்கத்தின் முதலீடு செய்தவர்கள் மட்டும் இன்று ஏற்பட்ட அதிரடி விலை வீழ்ச்சியால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை விதிக்கும்பட்சத்தில் தங்கத்தின் விலையில் இன்னும் கூட வீழ்ச்சி ஏற்படும் என்கிறார்கள் மார்க்கெட் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications