அதிவேகம் தான் விபத்துக்கு காரணம்: ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி
அரக்கோணம்: அரக்கோணம் அருகே நடந்த ரயில் விபத்துக்கு மின்சார ரயில் அதிவேகமாக வந்ததே காரணம் என்று மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் சித்தேரி என்ற இடத்துக்கு அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த காட்பாடி பாசஞ்சர் ரயில் மீது பின்னால் வந்த மேல்மருவத்தூர்-வேலூர் விரைவு பாசஞ்சர் ரயில் மோதியது.
நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் நடந்த இந்தக் கோர விபத்தில் 10 பேர் பலியானார்கள், 86 பேர் காயம் அடைந்தனர்.
அரக்கோணத்திலிருந்து காட்பாடி செல்லும் பாசஞ்சர் ரயில் சிக்னலுக்காக சித்தேரி ரயில் நிலையத்துக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தது. அப்போது மேல்மருவத்தூரிலிருந்து சென்னை சென்டிரல் வழியாக வேலூர் செல்லும் விரைவு பாசஞ்சர் ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது.
தனக்கு முன்பு நின்று கொண்டிருந்த காட்பாடி பாசஞ்சர் ரயில் மீது அது வேகமாக மோதியது. இதில் காட்பாடி ரயிலின் 5 பெட்டிகளும், மருவத்தூர் ரயிலின் 3 பெட்டிகளும் தடம் புரண்டு விழுந்தன. இதில் இருந்த பயணிகள் இடிபாடுக்குள் சிக்கிக் கொண்டனர்.
அந்த இடத்தில் கடும் இருட்டும், மழை வேறு பெய்து வந்ததாலும் மீட்புப் பணிகள் பெரும் சிரமத்தை சந்தித்தன. ரயில்வே மீட்புக்குழுக்கள், தீயணைப்புப் படையினர், ரயில்வே போலீசார், அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கடற்படை ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் விரைந்து வந்தனர். காயம் அடைந்தவர்களை அரக்கோணம் மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
இந்நிலையில் மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி நேற்று மதியம் சித்தேரி வந்தார். அங்கு அவர் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மின்சார ரயிலின் டிரைவர் அதிவேகமாக வந்தது தான் விபத்துக்கு காரணம். இருப்பினும் நிபுணர் குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்த பிறகு தான் காரணத்தை உறுதியாகத் தெரிவிக்க முடியும். மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொண்டதனால் தான் உயிரிழப்பு குறைந்துள்ளது என்றார்.
மின்சார ரயில் 2 மணி நேரம் தாமதாகியிருந்திருக்கிறது. இதனால் நேரத்தை சரிகட்ட அந்த ரயிலின் டிரைவர் ராஜ்குமார் மணிக்கு 80 கிமீ வேகத்தில் சென்றுள்ளார். படுவேகமாக சென்றதால் சித்தேரியில் நின்று கொண்டிருந்த ரயிலைப் பார்த்தும் உடனே நிறுத்தமுடியாமல் போனது.
மின்சார ரயில் வழக்கமாக மணிக்கு 70 கிமீ வேகத்தில செல்லும். விபத்து நடந்த அன்று மணிக்கு 50 கிமீ தான் செல்ல வேண்டும் என்று வேகத்தடை இருந்திருக்கிறது. அதையும் மீறி ராஜ்குமார் அதிவேகமாகச் சென்றுள்ளார்.
எங்கள் ஆவணங்கள் படி மின்சார ரயில் அரக்கோணத்துக்கு முந்தைய இரண்டு நிறுத்தங்களில் நிற்கவில்லை. சித்தேரியிலும் நிற்காமல் செல்லத் தான் டிரைவர் நினைத்திருக்கிறார். பாதுகாப்பு குழு இது குறித்து உறுதி செய்யும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷ்ணன் தெரிவித்தார்.
பச்சை விளக்கு எரிந்ததால் ரயிலை இயக்கினேன்-டிரைவர்:
இந் நிலையில் அரக்கோணத்தில் இருந்து காட்பாடி செல்ல சித்தேரி ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் மீது மோதிய, மருவத்தூரில் இருந்து வேலூருக்கு சென்ற மின்சார ரயிலின் டிரைவர் அதிகாரிகளிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், பச்சை விளக்கு எரிந்ததால் தான் ரயிலை தொடர்ந்து இயக்கியதாகக் கூறியுள்ளார்.
மேலும், சிவப்பு விளக்கு எரிவதை கவனிக்காமல் சென்றதே விபத்துக்கு காரணம் என்ற தகவலை அவர் மறுத்துள்ளார்.
இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக ராஜ்குமார் இந்த விபத்தில் பலியாகிவிட்டதாக தகவல் வந்தது. ஆனால், அவர் என்ஜினிலிருந்து குதித்துவிட்டதால் தப்பியுள்ளார்.
பலத்த காயமடைந்த அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் ராஜ்குமாரின் மண்டை உடைந்து முகம் சிதைந்துவிட்டது. அவரிடம் மருத்துவமனையில் வைத்தே அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ரயில்களில் மோதல் தவிர்ப்புக் கருவி இல்லை:
இந் நிலையில் ரயில்களில் மோதல் தவிர்ப்புக் கருவியை அனைத்து ரயில்களிலும் பொருத்தப்பட்டிருந்தால் சென்னையில் நடந்தது போன்ற விபத்தை தவிர்க்க முடியும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் தெரிவித்துள்ளது.
இது குறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுச் செயலர் ஏ.ஜானகிராமன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, அரக்கோணத்தை அடுத்த சித்தேரியில் நடந்த ரயில் விபத்தில் பலியான பயணிகளுக்கு ஆழ்ந்த இரங்கலும், காயமடைந்தோருக்கு ஆறுதலும் தெரிவித்துக் கொள்கிறோம்.
விபத்திற்கு ஏற்படும் முன் சிக்னல் கிடைத்திருக்கக் கூடும் அல்லது சிவப்பு விளக்கை மீறி வண்டியைச் செலுத்தி இருக்கலாம். நின்றிருந்த வண்டியின் பின்விளக்கு எரியாமல் இருந்திருக்கலாம்.
பார்வையை மறைக்கும் வளைவான பாதையிலோ, பலத்த மழை பெய்த சூழலில் நின்றிருந்த ரயில் கண்ணுக்குத் தெரியாமல் இருந்திருக்கக் கூடும் அல்லது பிரேக் வேலை செய்யாமல் போயிருக்கலாம், சிக்னல்கள் செயல் இழந்திருக்கக்கூடும். விபத்திற்கு இதுபோன்ற பல காரணங்கள் உள்ளன.
இவற்றில் ஏதேனும் ஒன்று இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம். எனவே, விபத்து காரணம் ரயில்வே பாதுகாப்பு விசாரணை ஆணையத்தால் கண்டறியப்பட வேண்டியுள்ளது.
இந்நிலையில், விசாரணை நடவடிக்கை துவங்கும் முன் ரயில்வே அமைச்சர் கூறிய கருத்து விசாரணையை பாதிக்கும். அமைச்சரின் இந்த பேச்சு விசாரணை நோக்கத்தை திசை திருப்பி விடும். ரயில்களில் கூடுதலாக ஒரு உதவி ஓட்டுனர் இருந்திருந்தால் இது போன்ற விபத்தை தவிர்த்திருக்க முடியும்.
கனிகான் சவுத்ரி ரயில்வே அமைச்சராக இருந்த போது உதவி ஓட்டுனர்கள் நியமிக்கப்பட்டனர். பின்பு அந்த பணியிடம் ஒழிக்கப்பட்டுவிட்டது. மேலும், மோதல் தவிர்ப்புக் கருவி அனைத்து வண்டிகளிலும் பொருத்தப்பட்டிருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்க முடியும். செலவினங்களைக் கருதி பணிகளின் பாதுகாப்பை விட்டு கொடுக்க கூடாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications