3 நாள் உண்ணாவிரதத்தை துவக்கினார் மோடி- முஸ்லீம்கள் உள்ளிட்ட 7000 பேர் பங்கேற்பு

அவருடன் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். 7000க்கும் அதிகமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அகமதாபாத் பல்கலைக்கழக வளாகத்தில் சத்பாவனா உண்ணாவிரதம் என்ற பெயரில் அவர் தொடங்கியுள்ள இந்த உண்ணாவிரதம் அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்காக நடத்தப்படுவதாகவதாக மோடி அறிவித்துள்ளார்.
இன்று மோடியின் 62 வது பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்துச் சொல்ல ஏராளமானோர் குவிந்துவிட்டனர்.
காலையில் தன் தாயின் காலைத் தொட்டு ஆசி பெற்ற பிறகு உண்ணாவிரத மேடைக்கு வந்தார் மோடி.
உண்ணாவிரதத்தின் முதல்நாளான இன்று மேடையில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, அருண் ஜெட்லி மற்றும் பாஜக கூட்டணியைச் சேர்ந்த அகாலிதளத் தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரும் அமர்ந்திருந்தனர். வைஸ்வன ஜனதோ என்ற பாடலுடன் இந்த உண்ணாவிரதம் தொடங்கியது. மேலும், அல்லாவு அக்பர் என்ற முழக்கங்களும், பல்வேறு வேத வாக்கியங்களும் துவக்கத்தில் உச்சரிக்கப்பட்டன.
ஏராளமான முஸ்லீம் பொது மக்களும் இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
என்மீது எறியப்படும் கற்கள் படிக்கட்டுகளாகும்...
தனது பேச்சின் போது, "மதச்சார்பின்னை மற்றும் ஓட்டு வங்கி அரசியலால் இந்தியாவை இரண்டாகப் பிரித்துவிட்டார்கள் அரசியல்வாதிகள். இந்த உண்ணாவிரதம் மூலம் ஏற்பட்டுள்ள ஒற்றுமை, உத்வேகத்தை ஒவ்வொருவரிடமும் கொண்டு சொல்ல வேண்டும் என்பதே என் ஆசை.
இந்த உண்ணாவிரதம் யாருக்கும் எதிரானதல்ல. குஜராத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான உண்ணாவிரதம் இது. அமைதி மற்றும் நல்லிணக்கம் மூலம் எந்த அளவு சாதிக்க முடியும் என்பதற்கு நாம் உதாரணமாக திகழ வேண்டும்.
80களிலும் 90களிலும் குஜராத் கலவர பூமியாக இருந்தது. ஒரு காத்தாடி பறந்தால் கூட அது மத கலவரத்தில் போய் முடியும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக கலவரமில்லாத, அமைதி பூமியாகத் திகழ்கிறது குஜராத்.
எனது வாழ்நாள் முழுவதையும் குஜராத் மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். யாருடனும், எதற்காகவும் கசப்பை வளர்த்துக் கொள்ளாத வகையில் இந்தப் பயணம் தொடர ஆண்டவன் எனக்கு சக்தியை அளிப்பார்.
இன்றைக்கு என்மீது பலர் கல்லெறிகிறார்கள் அதற்காக நான் கோபப்படவில்லை. அந்த கற்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து படிக்கட்டுகளாய் மாற்றிக் கொள்கிறேன்," என்றார்.
மாலை 5 மணிக்கு தனது முதல்நாள் உண்ணாவிரதத்தை மோடி முடித்துக் கொண்டார். பின்னர் நாளை காலை 10 மணிக்கு மீண்டும் உண்ணாவிரதத்தைத் துவக்குகிறார்.
காங்கிரஸ் போட்டி உண்ணாவிரதம்:
இந்த உண்ணாவிரதத்துக்குப் போட்டியாக மாநில காங்கிரஸ் தலைவர்களான சங்கர் சிங் வகேலா மற்றும் அர்ஜூன் மோத்வாடியா ஆகியோரும் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர்.
மோடியின் உண்ணாவிரதத்தை கடுமையாக விமர்சித்தார் சங்கர் சிங் வகேலா. "பெரும் செலவில் நல்ல ஏசி அறையில், 6000 போலீஸ் புடைசூழ நடத்தப்படும் இந்த உண்ணாவிரதம் வெரும் ஷோ" என்றார் வகேலா.












Click it and Unblock the Notifications