திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் திமுக போட்டி- கருணாநிதி அறிவிப்பு

முன்னதாக அவர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து யோசித்து முடிவு செய்யப்படும் என்று கூறியிருந்தார். இதனால் இடைத் தேர்தலை திமுக புறக்கணிக்கலாம் என்று தகவல் பரவியது.
இதனால் திமுகவினர் அதிர்ச்சியடைந்த நிலையில், இந்தத் தேர்தலில் திமுக நிச்சயம் போட்டியிடும் என்று கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பின்னர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலும், திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பெயரும் அறிவிக்கப்படும் என்றார்.
முன்னதாக நேற்று அவர் அளித்த பேட்டி:
கேள்வி- திருச்சி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா?
பதில்- திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்று, அமைச்சராக பதவியேற்க வருகிற நேரத்தில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அந்த நண்பர் (மரியம் பிச்சை) விபத்துக்கு ஆளான காரணத்தால் நடைபெறுகின்ற இடைத்தேர்தல் அது. அந்த அனுதாபத்தின் காரணமாக இந்த இடைத்தேர்தலில் திமுக போட்டியிட வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி யோசித்து முடிவு செய்யப்படும்.
கேள்வி- இதுபோன்ற இடைத் தேர்தல்களில், அந்தத் தொகுதிகளில் ஏற்கனவே நின்று வெற்றி பெற்ற கட்சிக்கே அந்தத் தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டுமென்று ஏற்கனவே ஒரு முறை நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே?
பதில்- எல்லோரும் அந்தக் கருத்தை ஒத்துக் கொண்டால் நாங்களும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வோம்.
கேள்வி- உள்ளாட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள் எப்போது அறிவிக்கப்படுவார்கள்?
பதில்- தேர்தல் தேதிக்கான அறிவிக்கை வரட்டும்.
கேள்வி- ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த வழக்கில் நீங்கள் விடுத்த அறிக்கையிலே 'அரசியல் நோக்கத்தோடு" என்று சொல்லியிருக்கிறீர்கள், அப்படி ஏதாவது திமுகவிற்கு எதிராக நடைபெறுவதாக சந்தேகப்படுகிறீர்களா?
பதில்- திமுகவிற்கு எதிராக நடைபெறுவதாக சந்தேகம் அல்ல. ஜாமீன் கூட கொடுக்க நீதிமன்றம் முன்வராமல் காலம் நீண்டு கொண்டே போவதைத்தான் சொல்லியிருக்கிறேன்.
கேள்வி- இந்த விவகாரத்தில் டிராய் நிறுவனத்தின் அறிக்கையில் இழப்பு இல்லை என்று சொல்லியிருப்பதால் காலதாமதம் ஆகிறதா?
பதில்- அது வேறு விவகாரம், இது வேறு விவகாரம். இரண்டையும் இணைத்திட முடியாது.
கேள்வி- குஜராத் முதல்வர் மோடி உண்ணாவிரதம் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்- மத நல்லிணக்கத்தைப் பற்றி மோடியின் கருத்து எனக்கு உடன்பாடானதுதான். அதே நேரத்தில் மோடியின் கடந்த காலச் செயல்பாடுகளை மறந்து விடவும் முடியாது.
கேள்வி- பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எல்லா கட்சியினரும் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்கிறார்களே?
பதில்- எல்லா கட்சியினரும் சொல்கிற கருத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.
கேள்வி- அது சாதிக் கலவரம் அல்ல என்று சட்டசபையில் 'அம்மா' சொல்லியிருக்கிறார்களே?
பதில்- 'அம்மா' சொல்லி விட்டால் அதை மறுக்க முடியுமா?
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
இந் நிலையில் இடைத் தேர்தலில் திமுக போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.
திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்:
இதற்கிடையே திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மேற்கு தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அதற்கான விண்ணப்பித்தை பூர்த்தி செய்து 19, 20ம் தேதிகளில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமைக்கழகத்தின் நேரடியாக அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.5,000 என்று கூறியுள்ளார்.
அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருப்பது எப்படி?:
இந் நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கான தனி தொகுதிகள், மகளிருக்கான தொகுதிகள் அறிவிக்கப்படாத நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருப்பது மாநில தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்த மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வெளிவருவதற்கு முன்னரே ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. தாழ்த்தப்பட்டோருக்கான தனி தொகுதிகள் மற்றும் மகளிருக்கான தொகுதிகள் எவை எவை என்று மாநில தேர்தல் ஆணையம் இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
10 ஆண்டு காலத்திற்கு ஒருமுறை இடஒதுக்கீட்டு சுழற்சிமுறை பின்பற்றப்பட வேண்டும் என்ற நிலையில் 5 ஆண்டு காலம் மட்டுமே முடிந்த பிறகு மேலும் 5 ஆண்டு காலம் மீதம் உள்ள நிலையில் இடஒதுக்கீடு சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
தேர்தல் ஆணையம் மீது சந்தேகம்:
இந்த அடிப்படையில்தான் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. எந்தெந்த தொகுதியில் யார் போட்டியிடுவது? என்ற தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இது அரசியல் கட்சிகளை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. மாநில தேர்தல் ஆணையம் இடஒதுக்கீடு குறித்த விவரங்களை ஆளுங்கட்சிக்கு மட்டும் முன்னரே தெரிவித்து இருக்கிறதோ? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
ஏற்கனவே, மாநில தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர் என்று தி.மு.க. வக்கீல்கள் மனு ஒன்றினை அவரிடம் அளித்திருக்கிறார்கள். இந்த நிலையில், ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. மட்டும் தனது வேட்பாளர்களை அறிவித்திருப்பது, மாநில தேர்தல் ஆணையம் குறித்த இந்த குற்றச்சாட்டினை உறுதிபடுத்துவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications