நரேந்திர மோடியின் மத நல்லிணக்க 3 நாள் உண்ணாவிரதம் முடிந்தது

சத்பவனா மிஷன் என்ற பெயரில் கடந்த 3 நாட்களாக அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக மாநாட்டு அரங்கில் உண்ணாவிரதம் இருந்தார் மோடி. மத நல்லிணக்கம், அமைதி, வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காக இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்வதாக அவர் அறிவித்திருந்தார்.
அவரது உண்ணாவிரதத்திற்கு ஆயிரக்கணக்கானோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். 3 நாள் உண்ணாவிரதத்தின்போது பெருமளவில் முஸ்லீம்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தது பலரையும் வியப்படைய வைத்தது. இந்த நிலையில் இன்று மாலை 6.15 மணியளவில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் மோடி. அவருக்கு இந்து, கிறிஸ்தவ,முஸ்லீம், சீக்கிய மதத் தலைவர்கள் ஜூஸ் கொடுத்தனர்.
செப்டம்பர் 17ம் தேதி தனது 62வது பிறந்த நாளின்போது உண்ணாவிரததத்தைத் தொடங்கினார் மோடி. இந்த உண்ணாவிரதம் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேசிய அளவில் அரசியலுக்கு வரும் முன்னோட்டமாக இது பார்க்கப்பட்டது. மேலும் இந்த உண்ணாவிரதத்தின்போது எந்த ஒரு மனிதனும் முழுமையானவன் இல்லை. அனைவருமே தவறு செய்கிறார்கள். அதேபோலத்தான் நானும்என்று அவர் கூறினார். இதன் மூலம் குஜராத் கலவரத்திற்கு மறைமுகமாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் தருவதாக கருதப்பட்டது.
மோடிக்குப் போட்டியாக காங்கிரஸ் தரப்பிலும் 3 நாள் உண்ணாவிரதம் இருக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலா தலைமையில் இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மோடி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட நிகழ்ச்சியில் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், தன் மீதான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் நரேந்திர மோடி எதிர்கொண்ட விதம் மிகவும் பாராட்டுக்குரியது. பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி கூட, மோடியை வெகுவாகப் பாராட்டியுள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications