வாக்களிக்க எம்பிக்களுக்கு லஞ்சம்: பாஜக தலைவர் குல்கர்னி கைது

இந்த வழக்கிவ் எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அமர் சிங் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன், லஞ்சம் வாங்கிய ஒரு பாஜக எம்பியும், இரு பாஜக மாஜி எம்பிக்களும் கைதாகியுள்ளனர்.
நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற பாஜக எம்.பிக்களுக்கு ரூ. 1 கோடி லஞ்சமாகத் தரப்பட்டது. அதை ஓட்டெடுப்பின் மீதான விவாதம் நடக்கும் போதே நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து கொட்டினர் பாஜக எம்பிக்கள்.
இது தொடர்பாக டெல்லி போலீசார் உரிய முறையில் விசாரிக்கவில்லை என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததையடுத்து விசாரணை சூடு பிடித்து முதலில் பாஜக முன்னாள் எம்பிக்களும் பின்னர் அமர் சிங்கும், அமர் சிங்கின் உதவியாளர் சஞ்சீவ் சக்சேனாவும் கைதாயினர்.
அதே போல அத்வானியின் முன்னாள் உதவியாளரும் மூத்த பாஜக தலைவருமான சுதீந்திர குல்கர்னி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர் தான் பணத்தை கொண்டு வந்து தந்ததை வீடியோ எடுப்பதில் ஆரம்பித்து, அதை நாடாளுமன்றத்தில் வந்து கொட்டும் வரை அனைத்து விஷயத்தையும் முன்னின்று நடத்தினார்.
மேலும் பாஜக எம்பிக்களுக்கு லஞ்சம் தரலாம் என்று அமர் சிங் தரப்பை தூண்டி விட்டதும் இவர் தான் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மற்றவர்கள் வரிசையாக கைதாகிவிட, குல்கர்னி மட்டும் அமெரிக்காவில் இருந்ததால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இந் நிலையில் சமீபத்தில் நாடு திரும்பிய அவர் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். லஞ்சம் தரப்பட்டதை வெளியுலகுக்குக் காட்டவே நான் அதை வீடியோவாக எடுத்தேன் என்று குல்கர்னி தரப்பில் வாதாடப்பட்டது.
ஆனால், இதை நீதிமன்றம் ஏற்கவில்லை. அவரை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நிருபர்களிடம் நேற்று பேசிய குல்கர்னி, சிறைக்கு செல்லவும் தயாராக இருப்பதாகவும், இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர்களின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றார்.
லஞ்சம் தரப்பட்ட விவகாரத்தில் முறைப்படி நாடாளுமன்ற சபாநாயகரிடமோ அல்லது போலீசாரிடமோ உரிய முறையில் புகார் தராமல், பணத்தை நாடளுமன்றத்தில் கொண்டு வந்து கொட்டியதை ஏற்க முடியாது என்று முன்னாள் லோக்சபா சபாநாயகராக இருந்த சோம்நாத் சட்டர்ஜி கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications