பின்லேடனுடனான தொடர்புக்கு ஆதாரம் இல்லை- முன்னாள் பாடிகார்ட் பாக்.கில் விடுதலை
லண்டன்: ஒசாமா பின் லேடனின் பாடிகார்டாக இருந்த அல் கொய்தா மூத்த கமாண்டர் அமின் அல் ஹக் என்பவரை பாகிஸ்தான் கோர்ட் விடுவித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பின்லேடனுக்கும், ஹக்குக்கும் இடையிலான தொடர்புகளை நிரூபிக்க உரிய ஆதாரங்களை போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. இதனால் ஹக் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அல் கொய்தா மூத்த கமாண்டர் அமின் அல் ஹக் கடந்த 2001-ம் ஆண்டு ஒசாமாவுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் சென்றார். பின்னர் அல் கொய்தாவுக்கு பண உதவி செய்யும் முக்கிய நபரானார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லாகூரில் வைத்து ஐஎஸ்ஐ அதிகாரிகளால் ஹக் கைது செய்யப்பட்டார். ஐஎஸ்ஐ அதிகாரிகள் ஹக்கை பாகிஸ்தான் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ஹக்கை பெஷாவரில் உள்ள சிறையில் அடைத்திருந்தனர்.
இந்தக நிலையில், ஹக் மீதான குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரத்தை போலீஸ் தரப்பு தாக்கல் செய்யாததாலும், பின்லேடனுக்கும், ஹக்குக்கும் இடையிலான தொடர்புகளை நிரூபிக்க முடியாததாலும் அவரை கோர்ட் தற்போது விடுவித்துள்ளது.
51 வயதாகும் ஹக் இந்த மாத துவக்கத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீண்ட காலமாக தலிபான் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பவர் ஹக். 1980களில் அவர் சோவியத் படைகளுக்கு எதிராகப் ஆப்கானிஸ்தானில் போராடியுள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு சூடானில் இருந்த ஒசாமாவை ஆப்கானிஸ்தானுக்கு அழைத்து வரச் சென்ற குழுவில் ஹக்கும் இடம்பெற்றிருந்தார் என்று தி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரி்ககா அல் ஹக்கின் சொத்துகளை முடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications